தேடுதல்

கவுனாசில் திருத்தந்தை திருப்பலி கவுனாசில் திருத்தந்தை திருப்பலி 

கவுனாஸ் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

கவுனாஸ் நகரின் Santakos பூங்காவில், திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வில்நியூஸ் நகரிலிருந்து, 106 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கவுனாஸ் நகருக்கு, செப்டம்பர் 23, இஞ்ஞாயிறு காலை 8.15 மணிக்கு காரில் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். லித்துவேனியாவின் இரண்டாவது பெரிய நகரமான கவ்னாஸ், Neris மற்றும் Nemunas ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்கது. இந்நகரிலுள்ள விலங்கியல் பூங்கா, லித்துவேனியாவிலுள்ள ஒரே பூங்காவாகும். ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, கவ்னாஸ் நகரின் Santakos பூங்காவில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள் வெள்ளமென ஆரவார மகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர். திருத்தந்தை திறந்த காரில் அந்தப் பூங்காவை வலம்வந்தவேளையில், மக்கள், மஞ்சளும் வெண்மையும் கொண்ட வத்திக்கான் நாடுகளின் கொடிகளை ஆட்டிக்கொண்டு, உரத்த குரலில் திருத்தந்தையை வாழ்த்திக்கொண்டிருந்தனர். வெண்மை நிறத்தில் உடையணிந்த பெரிய பாடகர் குழு துவக்கப் பாடலைப் பாட, திருத்தந்தையும், திருவழிபாட்டு ஆண்டின் 25ம் ஞாயிறு திருப்பலியை ஆரம்பித்தார். இத்திருப்பலியின் மறையுரையில்,  இயேசுவை நம் நடுவே வரவேற்போம். அவரது வார்த்தைகள் வழியே, திருப்பலி வழியே, நம்மைச் சுற்றியுள்ள சிறியவர்கள் வழியே நாம் இயேசுவை வரவேற்போம் என்றார், திருத்தந்தை. இத்திருப்பலியின் இறுதியில் ஞாயிறு மூவேளை செப உரையும் ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். மூவேளை செப உரைக்குப் பின்னர், கவுனாஸ் உயர்மறைமாவட்ட தலைமை இடம் சென்றார் திருத்தந்தை. இவ்விடம் இவ்வுயர்மறைமாவட்டத்தின் பெரிய குருத்துவ கல்லூரியாகும். பெரிய போரின்போது இவ்விடம் இராணுவ மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதன் பெரும்பகுதி ஆக்ரமிக்கப்பட்டதால் குருத்துவ கல்லூரி மூடப்பட்டது. இதன் நூலகத்தில் ஏறத்தாழ 90 ஆயிரம் புத்தகங்கள் அழிக்கப்பட்டன. அதிகமான அருள்பணியாளர்கள், சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும், 1945ம் ஆண்டுக்கும், 1981ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கவுனாசில் 428 அருள்பணியாளர்கள் படித்துள்ளனர். லித்துவேனியா சுதந்திரம் அடைந்தபின்னர், இவ்விடம் மீண்டும் திருஅவையிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு இஞ்ஞாயிறன்று ஆயர்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மாலை 3 மணிக்கு, கவுனாஸ் பேராலயத்தில், அருள்பணியாளர்கள், குருத்துவ மாணவர்கள் மற்றும் அருள்சகோதரிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. அவர்களுக்கு ஆற்றிய உரையில், இவ்வுலக செல்வங்களிலேயே சுகம் காண்பவர்களுக்காகவும், இவ்வுலக வசதிகள் மறுக்கப்பட்டவர்களுக்காகவும் நாம் பெருமூச்சு விடவேண்டும் என்று கூறினார் திருத்தந்தை. அதன்பின்னர், வில்நியூஸ் நகரில் யூதக் குடியிருப்பு முழுவதுமாக அழிக்கப்பட்ட  நினைவிடம் சென்று செபித்தல் இஞ்ஞாயிறன்று இடம்பெறும் கடைசி நிகழ்வாகும். இத்துடன், திருத்தந்தையின் லித்துவேனிய நாட்டின் இரண்டாவது நாள் பயண நிகழ்வுகள் நிறைவுறுகின்றன. உரையாடல், திறந்தமனம், புரிந்துகொள்தல் ஆகியவை வழியாக கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே பாலத்தைக் கட்டியெழுப்புவர்களாக லித்துவேனியா மாற இயலும் என திருத்தந்தை அம்மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2018, 16:24