தேடுதல்

வயதான அருள்பணியாளரைச் சந்திக்கிறார் திருத்தந்தை வயதான அருள்பணியாளரைச் சந்திக்கிறார் திருத்தந்தை 

வில்நியூஸ் பேராலயத்தில் வயதான குருக்கள் சந்திப்பு

புனிதர்கள் ஸ்தனிஸ்லாஸ், லடிஸ்லாஸ் பேராலயம் 1779க்கும், 1783ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இப்பேராலயம், பல்வேறு அழிவுகளுக்கு உள்ளாகி, மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஏறத்தாழ 29 இலட்சம் மக்கள் வாழ்கின்ற லித்துவேனியாவில், 79 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். லித்துவேனிய வரலாற்றை நோக்கினோமானால், இந்நாடு, லித்துவேனியர்கள், Tartarகள், போலந்து நாட்டவர், இரஷ்யர்கள், பெலாருஷ்யர்கள், உக்ரைன் நாட்டவர், அர்மேனியர்கள், ஜெர்மானியர்கள் போன்ற பல்வேறு இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது. அதேபோல், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், பழங்கால கத்தோலிக்கர், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதத்தவரும் அமைதியில் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் சர்வாதிகார கருத்தியல்கள் நுழைந்தபோது வன்முறைகளும், நம்பிக்கையின்மையும் வளர்ந்து இந்த நல்லிணக்க வாழ்வு சிதைக்கப்பட்டது. இத்தகைய சூழலிலிருந்து வெளிவர முயற்சிக்கும் சமுதாயத்தில், இந்நாட்டு இளையோர் வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் நேரம் மாலை 6.40 மணிக்கு, வில்நியூஸ் புனிதர்கள் ஸ்தனிஸ்லாஸ், லடிஸ்லாஸ் பேராலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை. 1779ம் ஆண்டுக்கும், 1783ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட அந்த பேராலயம், பல்வேறு அழிவுகளுக்கு உள்ளாகி, மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஏறத்தாழ அறுபது வயது முதிர்ந்த அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் அமர்ந்திருந்தனர். அவர்களோடு சேர்ந்து செபித்தார், திருத்தந்தை. இதன் முடிவில், ஓர் அருள்பணியாளரும் ஓர் அருள்சகோதரியும் திருத்தந்தையிடம் மலர்கள் கொடுக்க, திருத்தந்தை அதை சைபீரிய அன்னை மரியா திருவுருவத்திடம் வைத்து செபித்தார். இதற்குப் பின்னர், வில்நியூஸ் திருப்பீட தூதரகம் சென்று, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் லித்துவேனிய நாட்டில் முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2018, 16:19