வில்நியூஸ் இரக்கத்தின் அன்னை திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் வில்நியூஸ் இரக்கத்தின் அன்னை திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

வில்நியூஸ் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

1943ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று, வில்நியூஸ் நகரில் யூதக் குடியிருப்பில் எஞ்சியிருந்த யூதர்கள் தூக்கிலிடப்பட்டனர் அல்லது, வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகள், முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிச அதிகாரிகள் மற்றும் நாத்சி ஜெர்மானியர்களின் சித்ரவதைகள், சமய அடக்குமுறைகள், வதை முகாம்கள் போன்றவைகளால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளவை. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள், சோவியத்தின் சமய அடக்குமுறைகள் மற்றும் நாடுகளில் நாத்தீகம் அறிவிக்கப்பட்டது, திருஅவையிலும் மக்களிலும் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையிலும், தங்களின் விசுவாசத்தைக் காத்துவந்த இம்மக்களை மென்மேலும் அதில் உறுதிப்படுத்தவும்,  இம்மூன்று நாடுகளும், முதன்முறையாக சுதந்திரம் அடைந்ததன் நூறாம் ஆண்டையொட்டியும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டியும், செப்டம்பர் 22, இச்சனிக்கிழமையன்று தனது 25வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். நான்கு நாள்கள் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தில், முதலில் லித்துவேனிய தலைநகர் வில்நியூசுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அக்காலத்தில், பால்டிக் நாடுகளில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து, அதில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு, லித்துவேனிய அரசுத்தலைவர் Dalia Grybauskaité அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். வில்நியூஸ் நகரில் யூதக் குடியிருப்பு முழுவதுமாக அழிக்கப்பட்ட 75ம் ஆண்டின் நினைவையொட்டி, செப்டம்பர் 23, இஞ்ஞாயிறு மாலையில், திருத்தந்தை அவ்விடம் சென்று செபித்து, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நாளை நினைவுகூர்ந்து பேசிய, லித்துவேனிய அரசுத்தலைவர் Dalia அவர்கள், நாத்சி மற்றும் ஸ்டாலினிச கொள்கையுடைய அரசுகளால் இழைக்கப்பட்ட குற்றங்களால் மிகக் கொடுமையாய்ப் பாதிக்கப்பட்ட லித்துவேனியாவில், யூதர்களைக் காப்பாற்றுவதற்காக, பலர் தங்கள் உயிரையும் கையளிக்கத் தயங்கவில்லை. அம்மக்கள், மனித சமுதாயமே மிக முக்கியமானது எனக் கருதினர் என்றும் திருத்தந்தையிடம் கூறினார். திருத்தந்தையும், லித்துவேனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று பாராட்டி ஊக்குவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2018, 15:49