லித்துவேனியாவில் அருள்பணியாளர் மற்றும் துறவியருடன் திருத்தந்தை லித்துவேனியாவில் அருள்பணியாளர் மற்றும் துறவியருடன் திருத்தந்தை 

லித்துவேனிய அருள்பணியாளர், துறவியருடன் திருத்தந்தை

நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களை, லித்துவேனிய அருள்பணியாளர், மற்றும் துறவியரோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, "இயேசு கிறிஸ்து, நமது நம்பிக்கை" என்ற சொற்களே, என் லித்துவேனிய பயணத்தின் மையப் பொருளாக அமைந்துள்ளது. இந்த நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நம்பிக்கை உருவாவதற்குமுன் எழும் தவிப்பு

இந்த நம்பிக்கை உருவாவதற்குமுன், நமக்குள், தவிப்பு, பெருமூச்சு ஆகியவை உருவாகும் என்று திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறியுள்ளார் (உரோமையர் 8: 22-23,26) நாம் வாழும் இன்றையச் சூழலில், நமக்குத் தேவையான அனைத்தும் நம்மைச் சூழ்ந்திருப்பதால், அவற்றில் நாம் நிறைவு கண்டுவிடுகிறோம். இறைவனின் அழைப்பை பெற்றுள்ள நாம், இத்தகைய நிறைவில் தங்கி, இறைவனுக்காக ஏங்கி, தவித்து, பெருமூச்சுவிடத் தவறுகிறோம்.

இந்த உலகைக் காணும்போதும், நமக்குள் இத்தகைய பெருமூச்சு எழவேண்டும். இவ்வுலக செல்வங்களிலேயே சுகம் காண்பவர்களுக்காகவும், இவ்வுலக வசதிகள் மறுக்கப்பட்டவர்களுக்காகவும் நாம் பெருமூச்சு விடவேண்டும்.

நம்பிக்கையால் வரும் விடாமுயற்சி

திருத்தூதர், அடுத்ததாக, விடாமுயற்சியைக் குறித்து பேசுகிறார். துன்ப, துயரங்கள் நடுவே விளங்கவேண்டிய விடாமுயற்சி இது. இந்த விடாமுயற்சியைக் குறித்து, உங்களில் வயது முதிர்ந்தோர், இளையோருக்கு அறிவுரை வழங்கவேண்டும். நீங்களும் உங்கள் முன்னோரும் அடைந்த துயரங்களால் நீங்கள் கற்றுக்கொண்ட விடா முயற்சியைக் குறித்து, இளையோருக்கு சொல்லித்தாருங்கள்.

இயேசுவோடு ஒன்றிக்கச் செய்யும் நம்பிக்கை

இறுதியாக, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வது என்பது, அவரோடு நம்மையே அடையாளப்படுத்திக் கொள்வதாகும். நாம் கூடியிருக்கும் இந்த பேராலயம், புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம். இவ்விரு திருத்தூதர்களும், தாங்கள் இயேசுவிடம் பெற்றுக்கொண்ட கொடைகளை நன்கு உணர்ந்தவர்கள்.

ஆழத்திற்கு சென்று வலை வீசுங்கள் என்று இயேசு வழங்கிய கட்டளை வழியே, புனித பேதுரு, தன் நம்பிக்கையை அடைந்தார். நம்மையும் ஆழத்திற்கு வரச்சொல்லி இயேசு அழைக்கிறார். அங்கு, நம் நம்பிக்கையை, மகிழ்வைக் கண்டுகொள்ள, இயேசு அழைக்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2018, 15:11