லித்துவேனிய அரசு மாளிகையில் திருத்தந்தை உரை வழங்கியபோது.... லித்துவேனிய அரசு மாளிகையில் திருத்தந்தை உரை வழங்கியபோது.... 

லித்துவேனிய அரசு மாளிகையில் திருத்தந்தையின் உரை

விருந்தோம்பல், சகிப்புத்தன்மை, பிறர் மீது மதிப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவை, லித்துவேனியாவை தனித்துவம் மிக்க நாடாய், இவ்வுலகிற்கு அடையாளப் படுத்துகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரசுத்தலைவரே, அரசு அதிகாரிகளே, பெரியோரே, பெண்மணிகளே, "மதச் சுதந்திரத்தின் மீது கொண்டிருக்கும் பெரும் அன்புக்கு ஓர் அமைதியான சாட்சி" என்று புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அழைக்கப்பட்ட லித்துவேனியா நாட்டில் என் திருப்பயணத்தைத் துவக்குவது குறித்து மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்.

லித்துவேனியாவின் முதல் நூறு ஆண்டுகள்

வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் உங்கள் நாட்டு சுதந்திரத்தின் முதல் நூற்றாண்டு நினைவைக் கொண்டாடும் வேளையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. ஒரு நாட்டைச் சேர்ந்த மக்களாக, எண்ணிலடங்கா துயரங்கள், சிறைவாசம், நாடு கடத்தல், இன்னும் மறைசாட்சிய மரணம் என்ற அனைத்து இன்னல்களையும் கடந்த நூற்றாண்டில் நீங்கள் கண்டுள்ளீர்கள்.

கடந்த நூறு ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் உங்கள் நினைவுகளில் ஆழப் பதிந்து, உங்களை ஒரு நாடாக உருவாக்கியுள்ளன. "கடந்த கால அனுபவங்களிலிருந்து உங்கள் குழந்தைகள் சக்தியும் உறுதியும் பெறட்டும்" என்று, உங்கள் நாட்டுப்பண்ணில் கூறப்பட்டுள்ள சொற்களே உங்கள் செபமாக அமைந்துள்ளது.

திறந்த மனம் கொண்ட லித்துவேனிய மக்கள்

வரலாறு முழுவதும், பல்வேறு இனங்கள், மதங்களைச் சேர்ந்தவர்களை, லித்துவேனிய மக்கள் வரவேற்று, புகலிடம் வழங்கியுள்ளனர். லித்துவேனிய, போலந்து, இரஷ்ய, உக்ரேனிய, ஆர்மேனிய, ஜெர்மானிய நாட்டவரும், கத்தோலிக்கர்கள், ஆர்த்தடாக்ஸ் சபையினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், யூதர் என்ற மதத்தவரும் இந்நாட்டில் வாழ இடம் வழங்கப்பட்டது. விருந்தோம்பல், சகிப்புத் தன்மை, பிறர் மீது மதிப்பு, ஒருங்கிணைப்பு என்ற பண்புகளே உங்கள் நாட்டை தனித்துவம் மிக்கதாய் இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துகின்றன.

இன்றைய உலகை சுற்றிப் பார்க்கும்போது, பிரிவுகளையும், மோதல்களையும் தூண்டிவிடும் குரல்களே அதிகமதிகமாக ஒலிக்கின்றது. ஒருவருடைய கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பாதுகாக்க பிற இனத்தவரை, நாட்டவரை விரட்டிவிட வேண்டும் என்ற கூக்குரலே பெரிதாக கேட்கின்றது. இத்தகையைச் சூழலில், "வேற்றுமைகளை வரவேற்கிறோம்" என்று லித்துவேனியர்கள் கூறும் செய்தி, இவ்வுலகில் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

கிழக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பாலமாக...

உரையாடல், திறந்த மனம், புரிந்துகொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற பண்புகளை வெளிப்படுத்துவதன் வழியே, கிழக்கு, மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பாலமாக லித்துவேனியா திகழவேண்டும். இத்தகையப் பண்புகள் கொண்ட, முதிர்ச்சியடைந்த ஒரு வரலாற்றை, லித்துவேனியா, இவ்வுலகிற்கும், சிறப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கும் அளிக்கமுடியும்.

"நீதியையும், பிறரன்பையும் உருவாக்க, பொதுவான நலன் மீது ஈடுபாடு கொண்டிருக்கவேண்டும். பொதுவான நலனை செயல்முறைப் படுத்த, அயலவர் மீது அக்கறை கொண்டிருக்க வேண்டும்" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார். தனி மனிதரின் மாண்பை ஏற்றுக்கொள்வதன் வழியில் மட்டுமே, இன்றைய உலகில் நிலவும் அனைத்து மோதல்களையும் முடிவுக்குக் கொணரவும், நீடித்த அமைதியை உறுதி செய்யவும், நம்மால் முடியும்.

சமுதாய வளர்ச்சியில் லித்துவேனிய இளையோர்

உங்கள் நாட்டு இளையோர் மீது தனி கவனம் செலுத்துங்கள். இந்நாட்டின் எதிர்காலமாகிய அவர்கள், தங்கள் வரலாற்று வேர்களாக விளங்கும் மக்களோடு இணைத்திருப்பார்களாக. சமுதாயத்தின் வளர்ச்சியில் இளையோரை ஈடுபடுத்தும் சட்டதிட்டங்களையும், வழிமுறைகளையும் லித்துவேனியா உறுதி செய்வதன் வழியே, இளையோரின் வருங்காலக் கனவுகளை நனவாக்க முடியும்.

தன் அழைப்பை நடைமுறைப்படுத்தவும், நம்பிக்கை மற்றும் தொடர்பின் பாலமாக விளங்கவும் லித்துவேனியா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும், கத்தோலிக்கத் திருஅவை முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2018, 14:19