பால்டிக் திருத்தூதுப்பயண இலச்சினைகள் பால்டிக் திருத்தூதுப்பயண இலச்சினைகள் 

பால்டிக் நாடுகளுக்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி

செப்டம்பர் 22, இச்சனிக்கிழமை முதல், செப்டம்பர் 25, வருகிற செவ்வாய் வரை, லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 22, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணத்தை தொடங்கவிருப்பதை முன்னிட்டு, அந்நாடுகளுக்கு, தனது வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இத்திருத்தூதுப் பயணத்தை கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்பராக மேற்கொண்டாலும், இந்நாடுகளின் அனைத்து மக்களை அரவணைக்கவும், அமைதி, நன்மனம், வருங்காலத்தின் மீது நம்பிக்கை ஆகிய செய்தியை, அனைவருக்கும் வழங்கவும் விரும்புவதாக அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ள காணொளி செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மூன்று நாடுகளும் சுதந்திரம் அடைந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படும்வேளையில் இத்திருத்தூதுப் பயணமும் நடைபெறுகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, தற்போது அனுபவிக்கப்படும் சுதந்திரங்களை இயலக்கூடியதாக ஆக்குவதற்கு, கடந்த காலத்தில் தியாகங்கள் செய்த எல்லாரையும், தான் கவுரவப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

நாம் எல்லாரும் அறிந்திருப்பதுபோன்று, சுதந்திரம் என்பது, ஒரு சொத்தாகவும், முந்தைய மரபுரிமைகளாகவும், தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு, புதிய தலைமுறைகளிடம் அளிக்கப்பட வேண்டிய ஒன்று என்றுரைத்துள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பால்டிக் நாடுகளிலுள்ள அனைத்து மக்களும், சிறந்த ஒரு சமுதாயத்தை சமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இருளும், வன்முறையும், சித்ரவதைகளும் நிறைந்த காலங்களில், விடுதலைச் சுடர் அணைக்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு மனிதருக்கும் கடவுளால் வழங்கப்பட்ட மாண்பு மதிக்கப்படும் வருங்காலத்தில் நம்பிக்கை வைப்பதற்குத் தூண்டுதலாக அது அமைந்துள்ளது என்றும், திருத்தந்தையின் காணொளிச் செய்தி கூறுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2018, 15:14