லித்துவேனியாவில் சிலுவைகளின் குன்று லித்துவேனியாவில் சிலுவைகளின் குன்று 

பால்டிக் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

செப்டம்பர் 22, சனிக்கிழமை முதல், செப்டம்பர் 25, செவ்வாய் வரை, பால்டிக் நாடுகளுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 22, வருகிற சனிக்கிழமையன்று, பால்டிக் நாடுகளுக்கு, தனது 25வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குகிறார். லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று குடியரசுகளும், பால்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இறையாண்மையுடன் விளங்கும் இந்த மூன்று நாடுகளும், இரஷ்யாவிலிருந்து, முதலில் சுதந்திரம் அடைந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு மற்றும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அந்நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் (1993) 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நாடுகளுக்குச் செல்கிறார். இம்மூன்று நாடுகளில், லித்துவேனியா, பெருமளவு கத்தோலிக்கரையும், லாத்வியா, பெருமளவு லூத்தரன் கிறிஸ்தவர்களையும், எஸ்டோனியா, 75 விழுக்காடு மத நம்பிக்கையற்றவர்களையும் கொண்ட நாடுகளாக உள்ளன. லித்துவேனியாவில், “கிறிஸ்து இயேசுவே நம் நம்பிக்கை” என்ற தலைப்பிலும், லாத்வியாவில், “உம்மைத் தாயாக வெளிப்படுத்துக” என்ற தலைப்பிலும், எஸ்டோனியாவில், “எனது இதயமே விழித்தெழு” என்ற தலைப்பிலும், இத்திருத்தூதுப் பயணம் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. எஸ்டோனியா நாட்டில், Aglonaவிலுள்ள அற்புத அன்னை மரியா திருத்தலத்திலுள்ள திருப்படத்தின்கீழ் இந்த சொற்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த அற்புத அன்னை திருப்படமானது, அந்நாட்டை அணைப்பதன் அடையாளமாக உள்ளது. திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்கள், எஸ்டோனியவையும், Livoniaவையும், 1215ம் ஆண்டில் நான்காவது இலாத்தரன் பொதுச் சங்கத்தில் அன்னைமரியாவுக்கு அர்ப்பணித்தார். இந்த இறைவனின் அன்னை மற்றும் அவர் தாங்கியிருக்கும் குழந்தை இயேசுவிடமிருந்து சுடர்விடும் பொன்னிற ஒளிக்கற்றைகள், அந்நாடெங்கும் படர்கின்றன என நம்பப்படுகிறது.  வட ஐரோப்பாவில்,  பால்டிக் கடலின் கிழக்கு கரையில் அமைந்துள்ள இம்மூன்று நாடுகளும், கலாச்சாரம், தேசிய தனித்துவம் அல்லது மொழியை அடிப்படையாக வைத்து இவ்வாறு அழைக்கப்படுவதில்லை. EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம், NATO இராணுவ கூட்டமைப்பு, யூரோ பணத்தைப் பயன்படுத்தும் பகுதி, ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு (OECD) ஆகிய நான்கிலும் இந்த மூன்று நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. பொருளாதாரத்தில் அதிக வருவாய் பெறும் நாடுகளாக உலக வங்கியால் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை, மனிதவள முன்னேற்றத்திலும் உயர்ந்த குறியீடைக் கொண்டுள்ளன

லித்துவேனியா

லித்துவேனியா நாடு, ஐரோப்பாவின் வடகிழக்கில், பால்டிக் கடலின் தென்கிழக்கு கடற்கரையில், கிழக்கே சுவீடன் மற்றும் டென்மார்க்கையும், வடக்கே லாத்வியாவையும், தெற்கே, இரஷ்யா மற்றும் போலந்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ 28 இலட்சமாகும். பல நூற்றாண்டுகளாக, பால்டிக் கடலின் தென்கிழக்கு கடற்கரையில், பால்டிக் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். 1230களில், லித்துவேனிய அரசர் Mindaugas என்பவரால் லித்துவேனியப் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. 1253ம் ஆண்டு ஜூலை 6ம் நாளன்று, முதல் லித்துவேனிய அரசு உருவானது. 14ம் நூற்றாண்டில், லித்துவேனியா, ஐரோப்பாவில் பெரிய நாடாக விளங்கியது. அதாவது தற்போதைய லித்துவேனியா, பெலாருஸ், உக்ரைன், போலந்தின் சில பகுதிகள், இரஷ்யா ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்த ஒரு நாடாக இருந்தது. 1569ம் ஆண்டில் போலந்து-லித்துவேனிய காமன்வெல்த் அமைப்பு உருவாகியது. இரஷ்ய பேரரசு, லித்துவேனியாவின் பெரும்பகுதியை ஆக்ரமிக்கும் வரை, அதாவது 1772ம் ஆண்டு முதல், 1795ம் ஆண்டுவரை,  இந்த அமைப்பு  நீடித்தது. முதல் உலகப் போர் முடிவடைந்தபின்னர், 1918ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியன்று லித்துவேனிய குடியரசு உருவானது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியவேளையில், லித்துவேனியா நடுநிலைமை நாடாக அறிவித்தது. ஆயினும், 1939ம் ஆண்டு அக்டோபரில், இரஷ்யாவுடன் கட்டாயமாக ஒப்பந்தம் ஒன்றில் இந்நாடு கையெழுத்திடவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் சோவியத்தின் ஐந்து இராணுவத் தளங்கள், இருபதாயிரம் துருப்புகளுடன் லித்துவேனியாவில் அமைக்கப்பட்டன. 1940ம் ஆண்டு ஜூன் 14ம் தேதியன்று, லித்துவேனிய அரசை அகற்றவும், இரஷ்யாவின் சிவப்பு இராணுவம் லித்துவேனியாவிற்குள் நுழையவும் கட்டாயப்படுத்தப்பட்டது. வேறுவழியின்றி லித்துவேனியாவும் இசைவு தெரிவிக்க, இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட சிவப்பு இராணுவப் படைகள், பெலாருஸ்-லித்துவேனிய எல்லையைக் கடந்தன. அடுத்தநாள், இதே மாதிரியான வற்புறுத்தலை லாத்வியா மற்றும் எஸ்டோனிய நாடுகளும் எதிர்கொண்டன. இறுதியில், பால்டிக் நாடுகளை சோவியத் ஆக்ரமித்தது. 1990ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி லித்துவேனிய உயர் அவை, அதன் சுதந்திரத்தை அறிவிக்க, சோவியத் படைகள், லித்துவேனிய நாடாளுமன்றத்தைத் தாக்கின. லித்துவேனியா தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்து, தனது சுதந்திரத்தை அறிவித்தது. இம்மூன்று பால்டிக் நாடுகளில், முன்னாள் சோவியத் யூனியன் கூட்டமைப்பிலிருந்து தனி நாடாகப் பிரிவதாக அறிவித்த முதல் நாடு லித்துவேனியா ஆகும். இந்நாட்டில், 1387ம் ஆண்டில், போலந்து அரசரும், லித்துவேனியாவின் Grand Dukeமான 2ம் Władysław Jagiełło மற்றும் அவரது உறவினர் பெரிய Vytautas ஆகிய இருவரால், கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்நாட்டில், கத்தோலிக்கர் ஏறத்தாழ 75 விழுக்காட்டினராவர்.

சிலுவைகளின் குன்று

லித்துவேனியா நாட்டு மக்கள் சிலுவை மீது கொண்டிருக்கும் தனித்துவமிக்க பக்தியால், பல ஆண்டுகளாக, தங்கள் நாடெங்கும் சிலுவைகளை பதித்து வந்துள்ளனர். இன்றும் பதித்து வருகின்றனர். தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமுழுக்கு, திருமணம் போன்ற அனைத்து நிகழ்வுகளின் நினைவாக, சிலுவைகளை, சாலையோரம், பூங்கா என்று பல இடங்களில் ஊன்றி வந்துள்ளனர். இம்மக்கள் தங்கள் நாட்டில் சிலுவைகளைக் கொண்டு உருவாக்கியுள்ள பல இடங்களில் மிகவும் புகழ்பெற்றது, சியாவுலியாய் (Šiauliai) என்ற இடத்தில் அமைந்துள்ள சிலுவைகளின் குன்று (Hill of Crosses) ஆகும். இவ்விடத்தில், மக்கள் சிலுவைகளை விட்டுவிட்டுப் போவதற்கு சரியான காரணம் தெரியாது. ஆயினும், 1831ம் ஆண்டு முதல், லித்துவேனியா மேற்கொண்ட பல போராட்டங்களின் நினைவாக, Domantai மலைக்கோட்டையில், அதாவது தற்போதைய சிலுவையின் குன்றின் மீது முதலாவது சிலுவை வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்நாடு வரலாற்றில் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கத்தோலிக்கம் உறுதியாக நிலைத்து நின்றதன் அடையாளமாக, தலைமுறை தலைமுறைகளாக, இக்குன்றில் மக்கள் சிலுவைகளை வைக்கத் தொடங்கினர். சோவியத் அடக்குமுறையின்போது, இச்சிலுவைக் குன்று பலமுறை சிதைக்கப்பட்டாலும், மக்கள், அக்குன்றில், சிலுவைகளை நடுவதைத் தொடர்ந்தனர். 1961, 1973, மற்றும் 1975 ஆகிய மூன்று ஆண்டுகள், இக்குன்றின் மீதிருந்த சிலுவைகளை, சோவியத் இராணுவம், முற்றிலும் அழித்தது. இருப்பினும் மக்கள் இடைவிடாமல் தங்கள் சிலுவை பக்தியைத் தொடர்ந்தனர். 1980ம் ஆண்டு முதல், சோவியத் இராணுவம் தன் அழிவு வேலையை நிறுத்திக்கொண்டது. தற்போது, சிலுவைகளின் குன்று, லித்துவேனிய மக்களுக்கும், அயல்நாட்டவருக்கும் ஒரு திருத்தலமாக விளங்குகிறது. 1990களில் ஐம்பதாயிரம் என்ற அளவில் அங்கு நாட்டப்பட்டிருந்த சிலுவைகள், 2006ம் ஆண்டளவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தற்போது இவ்விடத்தில், சிலுவைகள் மாத்திரமன்றி பெரிய திருச்சிலுவை, லித்துவேனிய தேசபக்தர்களின் சிலைகள், அன்னை மரியாவின் திருவுருவங்கள், இயேசுவின் உருவம் தாங்கி,ய ஆயிரக்கணக்கான சிறிய சிலுவைகள், செபமாலைகள் போன்றவற்றையும் திருப்பயணிகள் எடுத்துச் சென்று வைக்கின்றனர்.

லாத்வியா

பால்டிக் நாடுகளில் ஒன்றான லாத்வியா, சுவீடன், போலந்து, இரஷ்யா ஆகியோரால் பல நூற்றாண்டுகளாக ஆளப்பட்டு வந்தது. பின்னர், முதல் உலகப்போர் முடிந்த கையோடு, இரஷ்யாவிடமிருந்து 1918ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி விடுதலைபெற்று, குடியரசு நாடானது. எனினும், 1934ம் ஆண்டு நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் முடியாட்சி நாடாக அது மாறியது. 1941ம் ஆண்டில் நாத்சி ஜெர்மனி, லாத்வியாவை ஆக்ரமித்ததால், இந்நாடு கட்டாயமாக சோவியத் யூனியனில் இணைக்கப்பட்டது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு சோவியத்தின் கட்டுப்பாட்டில் இந்நாடு இருந்தது. 13ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டுவரை அந்நியரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தாலும், லாத்வியா, தனது மொழி மற்றும் இசை மரபுகளால், தலைமுறைகளாக தனது தனித்துவத்தைக் காத்து வந்தது. இருந்தபோதிலும், 1710ம் ஆண்டு முதல், 1918ம் ஆண்டு வரை, இரஷ்யர்கள் ஆட்சி செய்ததால், தற்போது லாத்வியாவில், 26.9 விழுக்காட்டினர் இரஷ்யர்கள். மேலும், ஜெர்மானியர்களும் யூதர்களும் இந்நாட்டில் உள்ளனர். இரஷ்யர்களின் ஆக்ரமிப்பில் லாத்வியா நாடு, கடும் துன்பங்களை எதிர்கொண்டது. 1949ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, 43 ஆயிரம் தேசபக்தர்கள், சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டனர் அல்லது சோவியத் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். லாத்வியாவின் உள்கட்டமைப்பும், கல்வித்தரமும் மிக உயரிய நிலையில் இருந்ததால், சோவியத் யூனியனின் மிகவும் வளர்ச்சியடைந்த உற்பத்தி நிறுவனங்கள் லாத்வியாவில் அமைக்கப்பட்டன. 1980களின் இரண்டாவது பகுதியில், சோவியத் தலைவர் மிக்கேல் கோர்பஷேவ் அவர்கள், சோவியத்தில், அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பால்டிக் நாடுகளின் ஆக்ரமிப்பு, சட்டத்தோடு ஒத்திசைவாக இல்லை மற்றும் சோவியத் மக்களின் விருப்பமும் இது அல்ல என 1989ம் ஆண்டில் சோவியத் உயர்அவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 1990ம் ஆண்டு மே 4ம் தேதி, லாத்வியா சோவியத்திடமிருந்து பிரிவதாக அறிவித்து, தனி குடியரசானது. இந்நாட்டில் பெரும்பாலானவர்கள் லூத்தரன் சபை கிறிஸ்தவர்கள். கத்தோலிக்கர் 18.5 விழுக்காடு மட்டுமே.

எஸ்டோனியா

வட ஐரோப்பாவிலுள்ள மற்றுமொரு பால்டிக் நாடான எஸ்டோனியா, வடக்கே பின்லாந்தையும், மேற்கே சுவீடனையும், கிழக்கே இரஷ்யாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்நாடு, நிலப்பரப்பைத் தவிர, பால்டிக் கடலில் 2,222 தீவுகளையும் கொண்டுள்ளது. இப்பகுதியில், குறைந்தது கி.மு.ஒன்பதாயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இங்கு வாழ்ந்தனர் என சொல்லப்படுகின்றது. ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தைத் தழுவிய கடைசி இனங்களில் இந்நாட்டில் வாழ்ந்தவர்களும் அடங்குவர். பல நூற்றாண்டுகளாக, ஜெர்மானியர்கள், டென்மார்க் நாட்டவர், சுவீடன் நாட்டவர், இரஷ்யர்கள் ஆகியோரால் ஆக்ரமிக்கப்பட்டு, பின்னர் 1918ம் ஆண்டு, ஏனைய இரு பால்டிக் நாடுகளைப் போன்று இரஷ்யாவிடமிருந்து இந்நாடும் சுதந்திரம் அடைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் மற்றும் நாத்சி ஜெர்மானியர்களால் எஸ்டோனியா ஆக்ரமிக்கப்பட்டது. இறுதியில் சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1987ம் ஆண்டில், அமைதியான முறையில், சோவியத் கம்யுனிச ஆட்சிக்கு எதிராக, பாடல் புரட்சி செய்து, 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி தனி நாடானது. 2005ம் ஆண்டில் இணையதளம் வழியாக தேர்தல் நடத்திய முதல் நாடு எஸ்டோனியா ஆகும். மேலும், 2014ம் ஆண்டில், இணையம் வழியாக குடியுரிமை வழங்கிய முதல்  நாடும் எஸ்டோனியா ஆகும். இந்நாட்டின் தலைநகர் Tallinn.

பால்டிக் திருத்தூதுப்பயணம்

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு, செப்டம்பர் 22, சனிக்கிழமை காலை 6.50 மணிக்கு காரில் புறப்படும் திருத்தந்தை, காலை 7.30 மணிக்கு, லித்துவேனியா நாட்டின் தலைநகர் வில்நியூசுக்குப் A320 ஆல்இத்தாலியா விமானத்தில் புறப்படுவார். வருகிற சனி, ஞாயிறு தினங்களில் லித்துவேனியாவில் பயண நிகழ்ச்சிகளை நிறைவு செய்து, செப்டம்பர் 24 திங்களன்று லாத்வியா நாடு செல்லும் திருத்தந்தை, அன்று பயண நிகழ்ச்சிகளை நிறைவுசெய்து மீண்டும் அன்று இரவு வில்நியூஸ் செல்வார். செப்டம்பர் 25, செவ்வாயன்று, எஸ்டோனியா சென்று, அன்று மாலை 5.45 மணியளவில் பயண நிகழ்ச்சிகளை நிறைவுசெய்து, உரோம் நகருக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் பால்டிக் நாடுகளுக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நிறைவடையும். இத்திருத்தூதுப் பயணத்தில், மூன்று மறையுரைகள், ஏழு உரைகள், ஒரு மூவேளை செப உரை, நான்கு வாழ்த்துரைகள் என, 15 உரைகள் ஆற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

[ Audio Embed பால்டிக் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம்] 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2018, 15:28