தேடுதல்

Vatican News
ரீகா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ரீகா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

ரீகா நகர் பேராலயங்களில் திருத்தந்தை

800 ஆண்டுகள் பழமையுடைய ரீகா லூத்தரன் பேராலயத்தில், ஐரோப்பாவிலே மிகப்பழமையான ஆர்கன் உள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 24, இத்திங்கள் காலையில், லாத்வியா அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர், அவ்விடத்திலிருந்து 1.3 கிலோ மீட்டர் தூரம், சுதந்திர நினைவிடத்திற்கு காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். 42 மீட்டர் உயரமுள்ள இந்த நினைவிடம், 1935ம் ஆண்டில் கட்டப்பட்டது. நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக விளங்கும் இத்தூணிற்கு அடியில் மக்கள் மலர்களை வைப்பது வழக்கம். திருத்தந்தையும், இந்நினைவிடத்தில் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினார். இங்கிருந்து திறந்த காரில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ரீகா நகரின் லூத்தரன் கிறிஸ்தவ சபை பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். லாத்வியாவில், லூத்தரன் சபையினர் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், பல்வேறு கிறிஸ்தவ சபையினர், தங்களின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், அதேநேரம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்பேராலயத்தில், இத்திங்கள் காலை 10.40 மணிக்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்வழிபாட்டில் திருத்தந்தை ஆற்றிய உரையில், நற்செய்தியின் இசை, தொடர்ந்து, நமக்குள் ஒலிக்கவில்லையெனில், நம் வாழ்வை விண்ணகம் நோக்கி வழிநடத்தும் ஓசையைக் கேட்காமல், இவ்வுலகின் தனிமை நோயில் நாம் சிக்கிக்கொள்ள நேரிடும் என்று கூறினார்.

லாத்வியாவில், ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் கடவுள்நம்பிக்கையற்ற அரசு ஆட்சி செய்ததன் பாதிப்பை, இத்திங்கள் காலையில் காண முடிந்தது என செய்திகள் கூறுகின்றன. இவ்வழிபாட்டை நிறைவுசெய்து, ரீகா நகர் புனித யாக்கோபு கத்தோலிக்க ஆலயம் சென்றார் திருத்தந்தை. அங்கு நடைபெற்ற செப வழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்ப்புக்களின் நடுவே, விடாமுயற்சியுடன் வாழ்வது எப்படி என்று சொல்லித்தரும் சாட்சியங்கள் நீங்கள். உங்கள் வேர்களை பாதுகாத்து, அவற்றை வாழச் செய்யுங்கள். அப்போது, அந்த வேர்களில், இளையோர் தங்கள் வாழ்வை இணைத்துக்கொள்ள வழி வகுப்பீர்கள் என்று கூறினார். இவ்வழிபாட்டை நிறைவுசெய்து, ரீகா நகரின் திருக்குடும்ப இல்லத்தில் ஆயர்களுடன் மதிய உணவருந்தி, சிறிதுநேரம் ஓய்வெடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

24 September 2018, 16:53