தேடுதல்

லாத்வியாவில் திருத்தந்தைக்கு வரவேற்பு லாத்வியாவில் திருத்தந்தைக்கு வரவேற்பு 

லாத்வியாவில் திருத்தந்தைக்கு வரவேற்பு

“உங்கள் நாட்டில் நீங்கள் அளித்த தாராள வரவேற்பிற்கு, உங்களுக்கும், உங்கள் நாட்டு மக்களுக்கும் மிக்க நன்றி. லாத்வியா மக்களை எல்லாம்வல்ல இறைவன் அபரிவிதமாய் ஆசிர்வதிக்குமாறு செபிக்கின்றேன்” – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 24, இத்திங்கள் காலை உள்ளூர் நேரம் காலை ஏழு மணிக்கு, வில்நியூனிஸ் திருப்பீட தூதரகத்திற்கு, ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அந்நகரின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கிருந்து லாத்வியா நாட்டின் ரீகா நகருக்கு, பால்டிக் விமானத்தில் பயணமானார் திருத்தந்தை. ஒரு மணி நேரம் பயணம் செய்து, ரீகா பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, லாத்வியா அரசுத்தலைவர் Raimonds Vējonis அவர்களும், தலத்திருஅவை தலைவர்கள் மற்றும் அரசின் முக்கிய பிரதிநிதிகளும் வரவேற்றனர். இரு சிறார் மலர்கள் கொடுத்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், லாத்வியா அரசுத்தலைவரும் சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து சென்றவேளையில், பாரம்பரிய உடைகளில் ஒரு குழு, பாரம்பரிய நடனம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தது. ரீகா விமான நிலையத்திலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, லாத்வியா அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. இந்த மாளிகை முதலில் 1330ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த மாளிகையில், திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அம்மாளிகையின் இரண்டாவது தளத்தில், அரசுத்தலைவர் Raimonds அவர்களும், திருத்தந்தையும் தனியே சிறிது நேரம் உரையாடினர். பின்னர் பரிசுப்பொருள்களையும் பரிமாறிக்கொண்டனர். அந்த மாளிகையின் விருந்தினர் புத்தகத்தில், வரவேற்பிற்கு நன்றி சொல்லி கையெழுத்திட்டார் திருத்தந்தை.

முக்கிய அதிகாரிகள் சந்திப்பு

அதன்பின்னர் அம்மாளிகையில் பெரிய அறை ஒன்றில், அரசு, தூதரக அதிகாரிகள், சமூகநல அமைப்புகள், தலத்திருஅவை பிரதிநிதிகள் என, ஏறத்தாழ ஐந்நூறு பேரை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில் முதலில், லாத்வியா அரசுத்தலைவர் Raimonds Vējonis அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அதன்பின்னர் திருத்தந்தையும், லாத்வியா நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார். லாத்வியா நாடு, 'ஓர் அன்னையாக' மாறி, தன் இளைய தலைமுறையினருக்கு தகுந்த பாதுகாப்பையும், வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கினால், இங்கிருந்து யாரும் தங்கள் வேர்களை இழந்து வேறு நாடுகளுக்குச் செல்லத் தேவையில்லை என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 16:49