தேடுதல்

அக்லோனா அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை வழங்கும் மறையுரை அக்லோனா அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை வழங்கும் மறையுரை 

அக்லோனா திருத்தலத்தில் திருத்தந்தையின் மறையுரை

சிலுவையடியில், தன் மகனுக்கு நெருக்கமாக அன்னை மரியா நின்றுகொண்டிருந்தார். துன்பங்கள் கூடும் வேளையில், துன்புறுவோரைவிட்டு இவ்வுலகம் விலகிச் செல்லும் வேளையில், அன்னை மரியா அவர்களுக்கு மிக அருகில் நிற்கிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, இப்பயணத்தின் மையக்கருத்தான "உம்மையே அன்னையாக வெளிப்படுத்தும்" என்ற சொற்களை இங்கு நமதாக்குவோம். அன்னை மரியாவே, உம் புகழ்ப்பாடலை எங்கு தொடர்ந்து பாடுகின்றீர் என்பதை எங்களுக்கு வெளிப்படுத்தும். எங்கு உம் மகன் அறையப்பட்டுள்ளார் என்பதையும், எங்கு நீர் நிற்கின்றீர் என்பதையும் எங்களுக்கு வெளிப்படுத்தும்.

அன்னை மரியா பங்கேற்கும் இரு நிகழ்வுகள்

இயேசுவின் வாழ்வில் அன்னை மரியா பங்கேற்கும் இரு நிகழ்வுகள் மட்டும் யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளன: ஒன்று, கானா திருமண விருந்து, (காண்க யோவான் 2:1-12), மற்றொன்று, தற்போது நாம் வாசித்த நற்செய்தி பகுதியான, மரியா சிலுவையடியில் நிற்கும் நிகழ்வு (காண்க யோவான் 19:25-27).

சிலுவையடியில், தன் மகனுக்கு நெருக்கமாக அன்னை மரியா நின்றுகொண்டிருந்தார். துன்பங்கள் கூடும் வேளையில், துன்புறுவோரைவிட்டு இவ்வுலகம் விலகிச்செல்லும் வேளையில், அன்னை மரியா அவர்களுக்கு மிக அருகில் நிற்கிறார். இத்தகையச் சூழல்களில் நாமும் எவ்விதம் துன்புறுவோருக்கு அருகில் நிற்க முடியும் என்பதை, அன்னை மரியா சொல்லித்தருகிறார்.

அன்னை மரியாவும், அன்புச் சீடரும்...

சிலுவையடியில் தன் தாயும், தான் அன்பு செய்யும் சீடரும் நிற்பதை இயேசு பார்க்கிறார். அவர்கள் இருவரும் அவ்வாறு நிற்பது மட்டும் போதாது, அவர்கள் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இயேசு உணர்கிறார். எனவே, ஒருவரை மற்றவரிடம் ஒப்படைக்கிறார்.

நாமும், துன்புறுவோர் அருகில் நின்றாலும், அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் வாழ முடியும். மணவாழ்வில் இணைந்துள்ள எத்தனையோ பேர், அருகருகே வாழ்ந்தாலும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் வாழ்வதைக் காண்கிறோம். எத்தனையோ இளையோரும், வயதில் முதிர்ந்தோரும், சூழ இருப்போரால் ஏற்றுக்கொள்ள முடியாதச் சூழலில் வாழ்வதைக் காண்கிறோம்.

மன்னிப்பைக் கற்றுத்தரும் அன்னை மரியா

மற்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கு, நம் உள்ளங்களைத் திறக்கும்போது, நாம் காயமடையக் கூடும். சமுதாய வாழ்வில், அரசியல் உலகில் ஏற்பட்ட பழைய மோதல்கள், மக்களின் உள்ளங்களில், மீண்டும், மீண்டும் தோன்றலாம். அத்தகையைச் சூழல்களில் எவ்வாறு மன்னிக்கமுடியும் என்பதை, அன்னை மரியாவிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

இந்தத் திருத்தலத்தில் புதைக்கப்பட்டுள்ள ஆயர் ஸ்லோஸ்கான்ஸ் (Sloskans) அவர்கள், கைது செய்யப்பட்டபோது, அவரது பெற்றோருக்கு இவ்வாறு எழுதினார்: பழிக்குப்பழியோ, விரக்தியோ உங்கள் உள்ளங்களில் நுழைவதற்கு தயவுசெய்து அனுமதி அளிக்காதீர்கள். அவ்விதம் அனுமதி அளித்தால், உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கமாட்டோம். நாமும் அடிப்படை வாதிகளாகவே இருப்போம்."

சிலுவையடியில் நிற்கும் அன்னை மரியாவை நம் உள்ளங்களில், இல்லங்களில் ஏற்றுக்கொள்வோம். பாகுபாடுகள் ஏதுமின்றி, நாம் ஒருவர் ஒருவரை வரவேற்று, ஏற்றுக்கொள்ளும் வரத்தை, அன்னை மரியாவின் பரிந்துரையோடு, இத்திருத்தலத்தில் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 15:44