தேடுதல்

லாத்வியா, புனித யாக்கோபு கத்தோலிக்கப் பேராலயத்தில் வயது முதிர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் லாத்வியா, புனித யாக்கோபு கத்தோலிக்கப் பேராலயத்தில் வயது முதிர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனித யாக்கோபு கத்தோலிக்கப் பேராலயத்தில் திருத்தந்தை

வயதில் முதிர்ந்த பல அருள்பணியாளரும், துறவியரும், போர், மற்றும் அடக்குமுறை என்ற கொடுமைகளால் சோதிக்கப்பட்டாலும், அவர்கள் அனைவரும் மன உறுதியோடு நிலைத்திருக்கிறார்கள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, வயதில் முதிர்ந்த சகோதர்கள், மற்றும் சகோதரிகளின் நடுவே இருக்கும்போது, திருத்தூதரான புனித யாக்கோபின் மடலில் கூறப்பட்டுள்ள சொற்றொடர்கள் நினைவுக்கு வருகின்றன. மன உறுதியோடு நிலைத்திருக்கவேண்டும் என்ற கருத்தை, இம்மடலின் துவக்கத்திலும், இறுதியிலும், பல்வேறு சொற்கள் வழியே புனித யாக்கோபு கூறியுள்ளார்.

அடக்குமுறையில் நம்பிக்கைச் சுடர்கள் அணையாமல்...

உங்களில் பலர், போர், மற்றும் அடக்குமுறை என்ற கொடுமைகளால் சோதிக்கப்பட்டீர்கள். இருப்பினும், நீங்கள் அனைவரும் மன உறுதியோடு நிலைத்திருக்கிறீர்கள். நாத்சி அடக்குமுறையோ, சோவியத் அடக்குமுறையோ உங்கள் நம்பிக்கைச் சுடரை அணைத்துவிட நீங்கள் அனுமதிக்கவில்லை. நீங்கள் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டீர்கள், உங்கள் ஓட்டத்தை முடித்துவிட்டீர்கள். விசுவாசத்தைக் காத்துக்கொண்டீர்கள். (காண்க. 2 திமோ. 4:7)

உங்கள் நாட்டு விடுதலைக்காக பெரும் துன்பங்களைத் தாங்கி போராடிய நீங்கள், தற்போது, ஒதுக்கப்பட்டதைப்போல் உணர்கிறீர்கள். இன்றைய தலைமுறையினர், தங்கள் நாட்டு விடுதலை வீரர்களை வரலாற்றில் நினைவுகூர்கின்றனர், ஆனால், தினசரி வாழ்வில் மறந்து விடுகின்றனர்.

நம்பிக்கை இழக்கவேண்டாம்

புனித யாக்கோபு கூறுவதுபோல், நீங்கள் மனம் தளரவேண்டாம், விரக்தி அடையவேண்டாம். ஏமாற்றமும், துயரமும் உங்களை ஆட்கொள்ள விடவேண்டாம், உங்கள் மென்மைத்தனத்தையும், குறிப்பாக, உங்கள் நம்பிக்கையையும் இழக்கவேண்டாம்.

எதிர்ப்புக்களின் நடுவே, விடாமுயற்சியுடன் வாழ்வது எப்படி என்று சொல்லித்தரும் சாட்சியங்கள் நீங்கள். உங்கள் வேர்களை பாதுகாத்து, அவற்றை வாழச் செய்யுங்கள். அப்போது, அந்த வேர்களில், இளையோர் தங்கள் வாழ்வை இணைத்துக்கொள்ள வழி வகுப்பீர்கள்.

இந்த பேராலயத்தின் மறையுரை மேடையில் பொறிக்கப்பட்டுள்ள சொற்கள் இவை: இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!... உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். (தி.பா. 95:7-8)

நம் இதயத்தைக் கடினப்படுத்தி, மூடிக்கொண்டால், எப்போதும் புதியவற்றை ஆற்றும் இறைவனின் மகிழ்வை நாம் இழந்துவிடக்கூடும். எனவே, உங்கள் உள்ளத்தை இளமையோடு வைத்து, ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். (காண்க தி.பா. 34:8)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 15:37