லாத்வியாவின் எவஞ்செலிக்கல் லூத்தரன் பேராலய வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் லாத்வியாவின் எவஞ்செலிக்கல் லூத்தரன் பேராலய வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் 

"கிறிஸ்தவ ஒன்றிப்பு"க்கு லாத்வியா ஓர் எடுத்துக்காட்டு

லாத்வியா நாட்டில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளிடையே திகழும் நட்புறவும், கூட்டுறவு முயற்சிகளும் நம்பிக்கை தருகின்றன, நன்றி சொல்லத் தூண்டுகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, "வாழும் கிறிஸ்தவ ஒன்றிப்பு"க்கு லாத்வியா நாடு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இந்நாட்டில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளிடையே திகழும் நட்புறவும், கூட்டுறவு முயற்சிகளும் நம்பிக்கை தருகின்றன, நன்றி சொல்லத் தூண்டுகின்றன.

பழமை வாய்ந்த லூத்தரன் பேராலய 'ஆர்கன்'

நாம் கூடியிருக்கும் எவஞ்செலிக்கல் லூத்தரன் பேராலயம், கடந்த 800 ஆண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்தவ வாழ்வை, இந்நகரில் வளர்த்துவரும் இல்லமாக விளங்குகிறது. இந்த பேராலயத்தில் உள்ள 'ஆர்கன்' இசைக்கருவி, ஐரோப்பாவில் மிகப் பழமையான 'ஆர்கன்'. அது, இவ்வாலயத்தில் பொருத்தப்பட்ட வேளையில், அதுவே, உலகில் மிகப்பெரும் 'ஆர்கன்'ஆக விளங்கியது. இந்த இசைக்கருவியின் ஒலியால், எத்தனையோ உள்ளங்கள் விண்ணகத்தை நோக்கித் திரும்பியுள்ளன. இன்று, இந்த இசைக்கருவி, ரீகா நகருக்கும், இந்த பேராலயத்திற்கும் அடையாளமாக அமைந்துள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு காட்சிப்பொருளாக, இந்த 'ஆர்கன்' மாறியுள்ளது. தங்கள் வரலாற்றில், இந்த இசைக்கருவி ஆற்றிய பங்கை மறந்துவிட்டு, இதை ஒரு கண்காட்சிப் பொருளாகக் காணும் ஆபத்து, இந்நகரில் வாழ்வோருக்கும் உள்ளது. இதே ஆபத்து, நம் நம்பிக்கைக்கும் உருவாகலாம். 'வாழும்' கிறிஸ்தவர்கள் என்ற உணர்வுடன் வாழ்வதற்குப் பதில், சுற்றுலாப் பயணிகளாக இவ்வுலகில் வாழும் ஆபத்து உள்ளது. நமது நம்பிக்கை, வாழும் நம்பிக்கையாக இல்லாமல் போனால், அது அருங்காட்சியகப் பொருளாக மாறிவிடும்.

நற்செய்தியின் இசை ஒலிக்கவில்லையெனில்...

நற்செய்தியின் இசை, நம் வாழ்வில் தொடர்ந்து ஒலிக்கவில்லையெனில், அது, நமக்குள், ஆர்வத்தைத் தூண்டாத பழங்காலப் பாடலாக ஒலிக்கும்.

நற்செய்தியின் இசை, நம் ஆழ்மனதில் ஒலிக்கவில்லையெனில், பரிவும், மென்மையான அன்பும் நமக்குள் உருவாக்கும் மகிழ்வை, நாம் தொலைத்துவிடுவோம்.

நற்செய்தியின் இசை, நம் இல்லங்களிலும், பணியிடங்களிலும், இந்நகரின் பொது சதுக்கங்களிலும் ஒலிக்கவில்லையெனில், ஒவ்வொரு மனிதரின் அடிப்படை மாண்பை காப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும் அழைப்பை கேட்க இயலாமல் போகலாம்.

நற்செய்தியின் இசை, தொடர்ந்து, நமக்குள் ஒலிக்கவில்லையெனில், நம் வாழ்வை விண்ணகம் நோக்கி வழிநடத்தும் ஓசையைக் கேட்காமல், இவ்வுலகின் தனிமை நோயில் நாம் சிக்கிக்கொள்ள நேரிடும்.

இயேசுவின் ஒற்றுமை வேண்டுதல்

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்" (யோவான் 17:21) என்று இயேசு வேண்டிக்கொண்டார். ஒன்றாய் இருப்பது, இன்றும் இவ்வுலகில் நமக்குத் தரப்பட்டுள்ள முக்கிய பணி. பழங்காலக் காயங்களைப் பார்க்காமல், எதிர்காலத்தைக் காண்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு பணி இது. நற்செய்தியின் இசையை, நம் நகரச் சதுக்கங்களில் கேட்கவைப்பது நம் பணி.

இன்றைய உலகில், கிறிஸ்தவர்களின் பங்களிப்பு குறைந்துவிட்டது என்று எண்ணுவோர் நம்மிடையே உள்ளனர். இதனால், கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் காக்கும் நோக்கத்துடன், நம் தொடர்புகளைக் குறைத்துக் கொள்ளும் சோதனைகளும், இதுதான் நம் விதி என்ற எண்ணங்களும் எழுகின்றன. கிறிஸ்து, இன்றையக் காலக்கட்டத்தில் வாழ நம்மை அழைத்துள்ளார் என்றால், அதற்கு ஏற்ற வரங்களையும் கூடவே வழங்கியிருக்கிறார்.

அன்பு சகோதரர், சகோதரிகளே, நற்செய்தியின் இசை நம் மத்தியில் ஓங்கி ஒலிக்கட்டும். அந்த இசை, நம் உள்ளங்களில் கனவுகளையும், இறைவனைக் காணக்கூடியக் கண்களையும் வழங்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 15:31