தேடுதல்

லாத்வியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் லாத்வியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் 

லாத்வியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தையின் உரை

லாத்வியா நாடு, 'ஓர் அன்னையாக' மாறி, தன் இளைய தலைமுறையினருக்கு தகுந்த பாதுகாப்பையும், வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரசுத்தலைவரே, அதிகாரிகளே, பன்னாட்டுத் தூதர்களே, பெரியாரே, பெண்மணிகளே, உங்கள் நாடு பல்வேறு போராட்டங்களுக்கு உள்ளானாலும், தற்போது, இந்நாடு, கலாச்சாரம், கலை, இசை, ஆகியவற்றின் மையமாகவும், இப்பகுதிக்கு ஒரு முக்கிய துறைமுகமாகவும் திகழ்கிறது. "நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்" (தி.பா. 30:11) என்று, திருப்பாடல் ஆசிரியரோடு சேர்ந்து, நீங்களும் கூறமுடியும். உங்கள் கலைப்படைப்புக்களும், இசையும் உங்கள் நாட்டு எல்லையைத் தாண்டி வேறு நாடுகளிலும் உணரப்படுகின்றன.

விடுதலையின் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் லாத்வியா

இவ்வாண்டு, உங்கள் நாட்டு விடுதலையின் நூறாவது ஆண்டைக் கொண்டாடுகிறீர்கள். இந்த விடுதலைக்கு நீங்கள் அளித்த விலையை நன்கு உணர்ந்திருக்கிறீர்கள். உங்கள் வேர்கள் 'விண்ணகத்தில் உள்ளன' என்று உங்கள் நாட்டு எழுத்தாளர் செந்தா மவுரீனா (Zenta Maurina) அவர்கள் சொன்னது, இந்நாட்டு மக்களை உந்தித்தள்ளும் சக்தி பெற்றிருந்தது. விண்ணகத்தை நோக்கிய நம் பார்வையே, மண்ணகத்தில் நாம் பரிவோடு, ஒற்றுமையாக வாழக் கற்றுத்தருகிறது.

ஏனைய கிறிஸ்தவ சபைகளோடு இணைந்து, கத்தோலிக்கத் திருஅவையும் உங்கள் நாட்டு வேர்களின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்த வேர்களைப் புரிந்துகொண்டு வாழும்போது, வேற்றுமைகளும், மேலோட்டமான மோதல்களும் இருந்தாலும், அவற்றை வெல்ல முடியும். விடுதலையின் முதல் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், இந்த விடுதலைக்காக பாடுபட்டவர்களின் நினைவை நாம் கொண்டாடுகிறோம்.

லாத்வியா நாடு, 'ஓர் அன்னையாக' மாற அழைப்பு

லாத்வியா நாடு, 'ஓர் அன்னையாக' மாறி, தன் இளைய தலைமுறையினருக்கு தகுந்த பாதுகாப்பையும், வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கினால், இங்கிருந்து யாரும் தங்கள் வேர்களை இழந்து வேறு நாடுகளுக்குச் செல்லத் தேவையில்லை. வரலாற்றில் வேரூன்றி, எதிர்காலத்தை கட்டியெழுப்பும் வண்ணம் இளையோரை ஊக்குவிப்பது, இன்றைய தலைமுறையினரின் கடமை.

அரசுத்தலைவரே, நண்பர்களே, இந்நாட்டில் என் திருப்பயணத்தை துவக்கும் வேளையில், இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்குமாறு வேண்டுகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 15:29