புனிதர்கள் பேதுரு, பவுல் பேராலயத்தில் திருத்தந்தை புனிதர்கள் பேதுரு, பவுல் பேராலயத்தில் திருத்தந்தை 

புனிதர்கள் பேதுரு, பவுல் பேராலயத்தில் திருத்தந்தை

பிறரன்பு அருள்சகோதரிகள் இல்லத் தலைவருக்கு, இயேசுவின் பிறப்பு பற்றிய, மண்பாண்டத்தாலான சித்திரம் ஒன்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இச்செவ்வாய் மாலை 3 மணிக்கு பிரிஜட்டைன் அருள்சகோதரிகள் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், அந்த இல்லத் தலைவரிடம், ஆண்டவரின் இறுதி இரவுணவைச் சித்தரிக்கும், மரத்தாலான படம் ஒன்றை பரிசாக அளித்தார் திருத்தந்தை. அந்த இல்லத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த இல்லத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனிதர்கள் பேதுரு, பவுல் பேராலயத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. அங்கு, நான்கு சிறார், திருத்தந்தைக்கு, மலர்கள் அளித்து வரவேற்றனர். அந்த பேராலயத்தில், திருஅவையின் பிறரன்பு உதவிகளைப் பெறுவோரைச் சந்தித்தார் திருத்தந்தை.

இச்சந்திப்பில், முதலில் பேசிய விளாடிமீர் அவர்கள், திருத்தந்தையே, நான் மதுபானங்களுக்கு அடிமையாக இருந்ததால், எனது வாழ்வு முழுவதும் துன்பங்களும் சோகங்களும் நிறைந்திருந்தன. எனது வாழ்வு பற்றியும், கடவுளைப் பற்றியும், நினைக்கவோ, பேசவோ விரும்பாமல் இருந்தேன். ஆனால், ஆண்டவர், பிறரன்பு அருள்சகோதரிகள் இல்லத்திற்கு எவ்வாறு என்னை அழைத்து வந்தார் எனத் தெரியவில்லை. அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். என் வாழ்வில் ஒளியைப் பார்க்கின்றேன், என்னில் நம்பிக்கை துளிர்விட்டு, மீட்பு என்னை நெருங்கியுள்ளது. மக்களின் வாழ்வில் கடவுள் அற்புதங்களை ஆற்றுகிறார் என திருத்தந்தையே உம்மிடம் இன்று என்னால் சொல்லமுடியும், என்னில் கடவுள் தொடர்ந்து புதுமைகளை ஆற்றி வருகிறார் என்று பகிர்ந்து கொண்டார். 

இந்த பகிர்தலுக்குப் பின்னர், ஒரு தாயும் திருத்தந்தையை வாழ்த்திப் பேசினார். என் பெயர் மரீனா. எனக்கு நாற்பது வயதாகிறது. ஒன்பது பிள்ளைகளுடன் அரசு வழங்கும் வீட்டில் தங்கியிருந்தேன். எனது கணவர் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார். 13 ஆண்டுகளுக்கு முன்னர், எனது வாழ்வில் இருள்சூழ்ந்திருந்த நேரத்தில் பிறரன்பு அருள்சகோதரிகளைச் சந்தித்தேன். இரு அருள்சகோதரிகள் ஒருநாள் எனது பிள்ளைகளுடன் வந்தார்கள். அன்றுதான் முதன்முதலில் அருள்சகோதரிகளைப் பார்த்தேன். அதன்பின்னர் எனது குடும்ப வாழ்வு மாறியது. இன்று, நானும், எனது கணவரும், மகிழ்வோடு வாழ்கின்றோம். திருத்தந்தையே, தங்களின் வருகைக்கு நன்றி என்று அந்த தாய் பகிர்ந்துகொண்டார்.

இவ்விருவரின் பகிர்வைத் தொடர்ந்து, திருத்தந்தை அவர்களுக்கு ஒரு குறுகிய உரையை வழங்கினார். இச்சந்திப்பின் இறுதியில் பிறரன்பு பணியாற்றும் பத்துப் பேரை வாழ்த்தி ஆசிரளித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 16:34