எஸ்டோனியா அரசுத்தலைவரின் வரவேற்புரை எஸ்டோனியா அரசுத்தலைவரின் வரவேற்புரை 

எஸ்டோனியா அரசுத்தலைவரின் வரவேற்புரை

எங்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றோம் - எஸ்டோனிய அரசுத்தலைவர் திருத்தந்தையிடம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க மரியின் பூமியில், எம் நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், திருத்தந்தையே தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 1918ம் ஆண்டு பிப்ரவர் 24ம் தேதியன்று நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது, அரசியல், இன அல்லது சமய வேறுபாடின்றி அனைத்து எஸ்டோனிய மக்களுக்கும் சம சுதந்திரங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எமது நாட்டின் சனநாயகம் உருவாக்கப்பட்டுள்ள உறுதியான பாறைகளில், சமய சுதந்திரமும் முக்கியமான ஒன்று. எஸ்டோனியாவின் விடுதலைப் போரின்போது, நாடு, உலக சமுதாயத்தின் அங்கீகரிப்பைத் தேடியவேளையில், திருப்பீடம் எமக்கு நல் ஆதரவாக இருந்தது. நாடு கடினமான நேரங்களை எதிர்நோக்கியவேளைகளில், திருப்பீடத்திற்கும் எஸ்டோனியாவுக்கும் இடையே நட்புறவு தொடர்ந்து நிலவியது. உலகின் பிரச்சனைகளிலிருந்து மறைந்து வாழும்போது, எவரும் உறுதியாக அல்லது மகிழ்வாக இருக்க இயலாது. அதிவேக வளர்ச்சிகள் மற்றும் பொருளாதார முந்னேற்ற காலங்களில், ஏழைகள், மாற்றுத்திறனாளர்கள், சிறார், வயது முதிர்ந்தோர் போன்றோர் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது. காலநிலை மாற்றப் பிரச்சனையை எதிர்கொள்வது, நம் காலத்தின் முக்கிய விவகாரமாக இருக்கின்றது. இது, புலம்பெயர்வோர் பிரச்சனையோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை நாம் தெளிவாக அறிகின்றோம். தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றம் இதற்கு காரணமாக அமைந்தாலும், நாமும் நம் வாழ்வு முறையையும், மனநிலைகளையும் மாற்ற வேண்டும். இதில் சிறிய நாடுகளும் தலைவர்களாகச் செயல்பட முடியும். திருத்தந்தையே, நம் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நட்புறவு, தொடர்ந்து காலங்களுக்கும் நீடிக்கும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். தங்களின் வருகைக்கு நன்றி என தன் உரையை நிறைவு செய்து, திருத்தந்தையை உரையாற்ற அழைத்தார், எஸ்டோனிய அரசுத்தலைவர் Kersti Kaljulaid. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எஸ்டோனியாவில் தன் முதல் உரையை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 16:20