தேடுதல்

Vatican News
எஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு எஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு  (ANSA)

எஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு

தங்களின் இனிய வரவேற்பிற்கு நெஞ்சத்திலிருந்து நன்றிகூறும்வேளை, எல்லாம்வல்ல இறைவன் தங்கள் மீதும், எஸ்டோனிய மக்கள் மீதும் அமைதி மற்றும் மகிழ்வின் ஆசிர்வாதங்களைப் பொழியுமாறு செபிக்கின்றேன் என்பதை மகிழ்வுடன் உறுதியளிக்கின்றேன் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

விமான நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் சென்றார் திருத்தந்தை. அந்த மாளிகையின் முன்புறத்தில் அரசு மரியாதை நிகழ்வு இடம்பெற்றது. அந்த மாளிகையின் முக்கிய அறையில் அரசுத்தலைவரை, தனியே சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பழைய ஏற்பாட்டில் மோசே அவர்கள், வாக்களிக்கப்பட்ட பூமிக்கு, தன் மக்களை அழைத்துச் சென்றதைச் சித்தரிக்கும் படம் ஒன்றை அரசுத்தலைவர் Kersti Kaljulaid அவர்கள் திருத்தந்தைக்கு அளித்தார். இது, எஸ்டோனிய கலைஞர் Juri Arrak அவர்களின் வேலைப்பாடு எனவும், அவர் விளக்கினார்.   

இந்நிகழ்வை நிறைவுசெய்து, எஸ்டோனிய அரசுத்தலைவர் மாளிகையின் முன்புறமுள்ள ரோஜா மலர் தோட்டத்தில், அரசு, தூதரக அதிகாரிகள், சமூகநல அமைப்புகள், தலத்திருஅவை பிரதிநிதிகள் என ஏறத்தாழ இருநூறு பேரைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில் முதலில் அரசுத்தலைவர் Kersti Kaljulaid அவர்கள், முதலில்  திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.

25 September 2018, 16:14