தேடுதல்

எஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை வழங்கிய உரை எஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை வழங்கிய உரை 

எஸ்டோனியா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

எஸ்டோனியா நாட்டை, நினைவுகள் கொண்ட நாடாகவும் நிறைவான பயன் கொண்ட நாடாகவும் எண்ணிப்பாக்க விழைகிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரசுத்தலைவரே, அதிகாரிகளே, பன்னாட்டுத் தூதர்களே, பெரியாரே, பெண்மணிகளே, எத்தனையோ எதிர்ப்புக்களை சந்தித்தாலும், உள்ளத்தில் உறுதிகொள்ள உங்களைத் தூண்டும் இந்நாட்டு கலாச்சாரத்தைக் குறித்து அதிகம் கற்றுக்கொள்ள விழைகிறேன். பல நூற்றாண்டுகளாக இந்நாடு, Maarjmaa, அதாவது, "மரியாவின் நாடு" என்று அழைக்கப்பட்டது. மரியாவை நினைத்துப்பார்க்கும்போது, இரு எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன - நினைவு, மற்றும் நிறைவான பயன். மரியா, அனைத்து உயிர்களையும் தன் நினைவில் தாங்கியிருப்பவர் (காண்க லூக்கா 2:19) தன் மகனுக்கு உயிரளித்ததன் வழியே, மரியா நிறைவான பயன் தரும் அன்னையாக இருக்கிறார். எஸ்டோனியா நாட்டை, நினைவுகள் கொண்ட நாடாகவும் நிறைவான பயன் கொண்ட நாடாகவும் எண்ணிப்பாக்க விழைகிறேன்.

நினைவுகளின் நாடு

வரலாற்றின் பல காலக்கட்டங்களில் உங்கள் மக்கள் மிகக் கசப்பான துயரங்களையும், போராட்டங்களையும் சந்தித்துள்ளனர். இருப்பினும், 25 ஆண்டுகளுக்கு முன், உலக நாடுகளில் ஒன்றாக எஸ்டோனியா இடம்பெற்ற வேளையிலிருந்து, முன்னேற்றம் நோக்கி இந்நாடு பெரும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இன்று நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்குக் காரணமாக, உங்கள் முன்னோர் அடைந்த துயரங்களை நினைவில் கொள்வது, அவர்களுக்கு அளிக்கும் மரியாதை.

நிறைவான பயனுள்ள நாடு

தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட்ட ஒரு சமுதாயம், வாழ்வின் பொருளையும், வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வையும் இழந்துவிடக் கூடும். நம் நம்பிக்கை அனைத்தையும், தொழிநுட்பக் கருவிகளில் வைத்துவிட்டால், ஒருவர் ஒருவரோடு கொள்ளும் உறவு, முந்திய தலைமுறையினரோடு கொள்ளும் உறவு, கலாச்சாரங்களுக்கிடையே இருக்கவேண்டிய உறவு என்ற வேர்களை இழக்க நேரிடும்.

வேர்கள் கொண்ட சமுதாயமே, பல்வேறு கிளைகளுடன் வாழமுடியும். அங்கு அனைவரும் 'ஓர் இல்லத்தில் இருப்பது' போன்ற உணர்வைப் பெறமுடியும். வேரற்று, யாரோடும் தொடர்பின்றி வாழும் நிலை மிகக் கொடுமையானது. ஒரு நாடு, எப்போது தன் கலாச்சாரத்தில், முன்னோர் வழியில் வேரூன்றி இருக்கிறதோ, அந்த நாடு பயன்கள் நிறைந்த நாடாக விளங்கும்.

எஸ்டோனியா நாடு, பயன்கள் மிகுந்த ஒரு நாடாக உருவாக, கத்தோலிக்கத் திருஅவை, எண்ணிக்கையில் மிகக் குறைந்திருந்தாலும், தன் பங்களிப்பை வழங்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

எஸ்டோனியா மக்களை, குறிப்பாக, இந்நாட்டின் முதியோரையும், இளையோரையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 14:26