தாலின் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் திருத்தந்தை தாலின் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் திருத்தந்தை 

தாலின் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் திருத்தந்தை

சார்லஸ் ஆலயத்தில், எஸ்டோனியா முழுவதிலிருந்தும், பின்லாந்து, இரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இளையோர் கூடியுள்ளனர்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

எஸ்டோனிய அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பின்னர், அங்கிருந்து காரில் 4.4 கிலோ மீட்டர் தூரம் சென்று, தாலின் சார்லஸ் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயம் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். 1862க்கும், 1870ம் ஆண்டுக்கும் இடைபட்ட காலத்தில், Otto Pius Hippius என்பவரின் திட்டத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம், இந்நகரிலுள்ள 19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆலயமாகும். Tõnismägi குன்றிலுள்ள இந்த ஆலயம், முதலில் 1670ம் ஆண்டில், சுவீடன் அரசர் 9ம் சார்லஸ் அவர்களின் கட்டளையின்பேரில், மரத்தால் கட்டப்பட்டது. அவரின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டது. 1710ம் ஆண்டில், மிகப்பெரிய வட போரில், மரத்தாலான இவ்வாலயம் முழுவதும் எரிக்கப்பட்டது. எரியாமல் இருந்த ஆலயத்தின் மணிகள், இன்று, இப்புதிய ஆலயத்தில் உள்ளன.

இந்த சார்லஸ் ஆலயத்தில், இளையோருடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலில் ஒரு கத்தோலிக்க இளம்பெண்ணும், ஒரு லூத்தரன் இளைஞரும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். இளம்பெண் பேசியவேளையில், இன்று இந்த சார்லஸ் ஆலயத்தில், எஸ்டோனியா முழுவதிலிருந்தும், பின்லாந்து, இரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இளையோர் கூடியுள்ளனர். திருத்தந்தையே, தங்களின் வருகைக்கு நன்றி. தங்களின் வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறோம். எங்களின் மகிழ்வு, பாடல், மற்றும் சான்றுகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறினார்.

இதற்குப் பின்னர் பேசிய ஓர் இளைஞர், திருத்தந்தையே, தங்களுக்காகச் செபிக்குமாறு கேட்கின்றீர்கள், எங்களுக்காகச் செபிக்குமாறு இன்று நாங்கள் கேட்கின்றோம். அதன் வழியாக நாங்கள் இயேசுவால் தொடப்படுவோம் என்று கூறினார்.

லூத்தரன் சபை பேராயர் Urmas Viilma அவர்களும் திருத்தந்தையை வரவேற்று பேசினார். பின்னர், லூத்தரன், ஆர்த்தடாக்ஸ், மற்றும் கத்தோலிக்கத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் சாட்சியங்கள் வழங்கினர். அதன்பின்னர், எஸ்டோனிய கிறிஸ்தவ சபைகளின் அவைத் தலைவரும் சுருக்கமாக உரையாற்ற, தாலின் அப்போஸ்தலிக்க நிர்வாகி நன்றியுரை வழங்கினார். பின்னர் திருத்தந்தையின் உரை இடம் பெற்றது.

இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வின் இறுதியில், அதில் கலந்துகொண்ட பத்து சமயத்தலைவர்களுக்கு வாழ்த்துச் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ். நிர்வாக குழுவினர் பத்துப்பேரையும் வாழ்த்தி நன்றி கூறிய திருத்தந்தை, ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது, பாடகர் குழு பாடிக்கொண்டிருந்தது. இச்சந்திப்பு நிறைவுற்றபோது, உள்ளூர் நேரம் ஏறத்தாழ பகல் ஒரு மணியாகும். சார்லஸ் ஆலயத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று, Piritaவிலுள்ள பிரிஜட்டைன் அருள்சகோதரிகள் இல்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு மதிய உணவருந்தி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 16:25