தேடுதல்

எஸ்டோனியாவிலிருந்து திரும்பிய பயணத்தில் பேட்டி எஸ்டோனியாவிலிருந்து திரும்பிய பயணத்தில் பேட்டி 

விமானப்பயணத்தில் திருத்தந்தை வழங்கிய நேர்காணல்

செய்தியாளர்களுக்கு திருத்தந்தை வழங்கிய நேர்காணலில், திருப்பீட-சீன உறவு, பாலின முறைக்கேடுகள், மற்றும், போர்க்கருவிகளை அழிப்பது ஆகியவை முக்கியக் கருத்துக்களாகப் பேசப்பட்டன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் இறுதியில், உரோம் நகர் திரும்பும் வேளையில், செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில், திருப்பீட-சீன உறவு, பாலின முறைக்கேடுகள், மற்றும், போர்க்கருவிகளை அழிப்பது ஆகியவை முக்கியக் கருத்துக்களாகப் பேசப்பட்டன.

செய்தியாளர்களின் கேள்விகள், முதலில், திருத்தூதுப் பயணத்தைக் குறித்து அமைவது நல்லதென்று கூறியத் திருத்தந்தை, தான் பயணம் மேற்கொண்ட மூன்று நாடுகளும், அந்நிய ஆக்ரமிப்புக்களைக் கண்டாலும், அவை, தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றி வந்துள்ளதைக் கண்டு தான் வியந்ததாகக் குறிப்பிட்டார்.

வில்நியூஸ் நகரில், சித்திரவதைக் கூடங்களை காணச் சென்றதை, குறிப்பாக எடுத்துரைத்தத் திருத்தந்தை, இன்றும், சித்திரவதைகள், பல்வேறு வடிவங்களில் தொடர்வதைக் குறித்து, ஆழ்ந்த வேதனையை வெளியிட்டதோடு, போர் கருவிகளும், சித்திரவதைக் கருவிகளும், வர்த்தகமாக மாறியுள்ளதை, வன்மையாகக் கண்டனம் செய்தார்.

திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், பல ஆண்டுகளாக சீன அரசின் சிறைகளில் வாடிய ஆயர்களுக்கும், கத்தோலிக்கருக்கும் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது என்ற கருத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் பதில் அளித்த திருத்தந்தை, துன்புற்றோரின் வேதனைகளை தான் உணர்ந்துள்ளதாகவும், கத்தோலிக்க திருஅவை சீனாவில் வளர்வதற்கு ஏற்ற ஒரு சமரச முயற்சியாக உருவாகியுள்ள இந்த ஒப்பந்தத்திற்கு, தான் முழு பொறுப்பு ஏற்பதாகவும், இதனால் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளோர், இதன் நல்விளைவுகளைக் காண்பர் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

சீன அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நல்லுறவுகளை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள், இரு அடி முன்னேறினால், ஓரடி பின்னோக்கி திரும்பியுள்ளது என்ற உருவகத்தைப் பயன்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த முயற்சிகளை விவரித்தார்.

எந்த ஓர் ஒப்பந்தமும் துன்பங்களைக் கொணர வாய்ப்பு உண்டு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக, ஒரு சிலரது குரல்கள் எழுந்துவரும் அதே வேளையில், பல சீன ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் இந்த ஒப்பந்தத்தை மதித்து, ஆதரித்து, தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

பாலின முறைகேடுகள் குறித்து கேள்வி எழுந்தபோது, உலகின் பல்வேறு துறைகளிலும், அமைப்புக்களிலும் இந்த முறைகேடு காணப்படுவது உண்மை என்றாலும், 'குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவரும்' பொறுப்பில் இருக்கும் அருள்பணியாளர்கள் இந்த தவறைச் செய்வது, மிகப்பெரும் தவறாக மாறுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் பதில் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2018, 16:16