லூத்தரன் பேராலயத்தில் திருத்தந்தை உரை வழங்கியபோது... லூத்தரன் பேராலயத்தில் திருத்தந்தை உரை வழங்கியபோது... 

எஸ்டோனிய இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

இன்று நான் உங்களுக்கு கூறவிழைவது இதுவே. நீங்கள் மகிழும்போதும், அழும்போதும் உங்களோடு இணைத்து மகிழவும், அழவும் விரும்புகிறோம். இவ்வாறு, நீங்கள் இயேசுவைப் பின்பற்ற, நாங்கள் உதவி செய்ய விரும்புகிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்புக்குரிய இளம் நண்பர்களே, உங்கள் வரவேற்பிற்கும், பாடல்களுக்கும், குறிப்பாக, இங்கு சாட்சியம் பகர்ந்த இளையோருக்கும் என் நன்றி. சந்திப்பதும், வாழ்வுக்கதைகளைப் பகிர்வதும், நமது நம்பிக்கையையும், எண்ணங்களையும் பகிர்வதும் எப்போதும் நல்லது. "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்" (யோவான் 17:21) என்று, இயேசு தன் சீடரோடு இறுதி இரவுணவு அருந்திய வேளையில் கண்ட கனவு நனவாகும்.

பேராலயத்தில் தீட்டப்பட்டுள்ள ஓர் ஓவியம்

இந்தப் பேராலயத்தில் தீட்டப்பட்டுள்ள ஓர் ஓவியத்தில், மத்தேயு நற்செய்தியில் காணப்படும் "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28) என்ற சொற்கள் காணப்படுகின்றன. இச்சொற்களைக் கூறுவதற்கு முன், அதே பிரிவில், மக்கள் தன்னை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதை இயேசு உணர்ந்து வருந்தினார் என்று, நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுகிறார். (காண்க மத். 11:16-19)

இளையோரோடு இணைந்து மகிழவும், அழவும்...

பெரியவர்கள் தங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று இளையோரும் அடிக்கடி உணர்கின்றனர். வயதில் முதிர்ந்தோர், இளையோருடன் இணைந்து பயணம் செய்வது, குறிப்பாக, அவர்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்பதை, அண்மித்துவரும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு இளையோராகிய நீங்கள் உணர்த்தியிருக்கிறீர்கள். உங்களை தீர்ப்பிடுபவராகவோ, உங்களைப்பற்றி கொண்டிருக்கும் பெரும் கவலையால், உங்களை கட்டுப்படுத்த விழையும் பெற்றோராகவோ, யாரும் உங்களுடன் நடப்பதை நீங்கள் விரும்புவதில்லை என்பதை அறிவோம். எனவே, இன்று நான் உங்களுக்கு கூறவிழைவது இதுவே. நீங்கள் மகிழும்போதும், அழும்போதும் உங்களோடு இணைந்து மகிழவும், அழவும் விரும்புகிறோம். இவ்வாறு, நீங்கள் இயேசுவைப் பின்பற்ற நாங்கள் உதவி செய்ய விரும்புகிறோம்.

கடின உள்ளம் கொண்டு வாழ்வது

மத்தேயு 11ம் பிரிவில், இயேசு, தான் பார்வையிட்ட நகரங்களைக் குறித்து முறையிடுகிறார். தான் செய்த அருங்குறிகளைக் கண்டபின்னரும், அந்நகரங்கள் தன்னைப் புரிந்துகொள்ளாமல், கடினமனதுடன் இருப்பதை, இயேசு சுட்டிக்காட்டுகிறார். இளையோரும், தங்களுக்கு முந்திய தலைமுறையினர், சரியான புரிதல் இன்றி, கடின உள்ளம் கொண்டிருப்பதை உணர்கின்றனர். புரிந்துகொள்ள விரும்பாமல், தங்கள் போக்கில் செல்லும் முதியோரைக் காணும் இளையோர், அவர்களை மட்டுமல்லாமல், அவர்கள் நம்பும் திருஅவையையும் ஒதுக்கி வைக்கின்றனர்.

இந்த பேராலயத்தில் பதிக்கப்பட்டுள்ள சொற்களை கூறுவதற்கு முன், இயேசு, குழந்தைகளுக்கு இருந்த புரிதலைக்கண்டு, தந்தைக்கு நன்றி கூறுகிறார். ஞானிகளுக்கும், அறிஞருக்கும் மறைக்கப்பட்டவை, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டதென்று இயேசு கூறுகிறார். அதேவண்ணம், இயேசுவோடு இணைந்து, நானும், இளையோருக்காக இறைவனிடம் நன்றி கூறுகிறேன். முதியோரின் தவறுகளையும் தாண்டி, இறைவனைப் புரிந்தகொள்வதற்கு இளையோர் மேற்கொள்ளும் முயற்சிகள் போற்றுதற்குரியன.

இந்த ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சொற்களை நாம் மீண்டும் சொல்வோம்: "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28). நம்முடைய குறைகள், பிரிவுகள் அனைத்தையும் தாண்டி, நாம் இங்கிருப்பதற்கு ஒரே காரணம், இயேசு. அவர் நம் சுமைகளைத் தாங்கும்போது அதைவிட பெரிய அமைதி நமக்குக் கிடைக்கப்போவதில்லை.

இயேசுவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை

இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை நம்மை ஒன்றாய் இணைத்துள்ளது. வாழ்வில் நம்பிக்கையிழந்து சோர்ந்திருக்கும் இளையோருக்கு இயேசுவைக் கொண்டுசெல்ல அவர் நம்மை அழைத்துள்ளார். இந்தப் பணியில் நாம் தனித்து விடப்படுதில்லை. ஏனெனில், கடவுள் நம்முடன் இருக்கிறார். அவர் ஏற்கனவே சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கிறார், ஏனெனில், அவரே நமக்காக, விளிம்புகளில் வாழ்வதைத் தேர்ந்துகொண்டார். (காண்க பிலிப். 2:6-8; யோவான் 1:14) சமுதாயத்தில் காயப்பட்டு, சோர்ந்திருக்கும் மக்கள் நடுவே இயேசு ஏற்கனவே பிரசன்னமாகியிருக்கிறார். அவரைக் காணவும், அவர் தரும் வியப்புக்களை அனுபவிக்கவும் தூய ஆவியார் நமக்குத் துணை புரிவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 14:27