தேடுதல்

 தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக கோபுரங்கள் நினைவிடம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக கோபுரங்கள் நினைவிடம் 

9/11 தாக்குதலுக்கு திருத்தந்தையரின் பதிலிறுப்புகள்

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியூ யார்க் நகரில், உலக வர்த்தக கோபுரங்கள், தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதன் 17ம் ஆண்டு நினைவு நாளன்று, திருத்தந்தையர், உலக அமைதியை வலியுறுத்திவருவதை எண்ணிப் பார்க்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று, நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு கட்டடங்கள் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதை, தொலைக்காட்சி வழியே கண்டு துன்புற்ற புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் அவர்களை, தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் இயலாமல் போனதையடுத்து, அவருக்கு ஓர் அனுதாபத் தந்தியை உடனடியாக அனுப்பி வைத்தார்.

அதற்கு அடுத்த நாள், செப்டம்பர் 12, புதன் கிழமை ஆனதால், அன்று வழங்கிய மறைக்கல்வி உரையில் இத்தாக்குதல் குறித்து பேசியத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ஆழம் அறியமுடியாத மனித உள்ளத்திலிருந்து, சொல்லொண்ணா கோபம் வெளியாவதை, இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி, நியூ யார்க் நகருக்குச் சென்றிருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், உலக வர்த்தக கோபுரங்கள் இடிந்து விழுந்த இடத்தில், அத்தாக்குதலில் உயிரிழந்தோரின் நினைவாக ஒரு மெழுகுதிரியை ஏற்றி, உலக அமைதிக்காக செபம் ஒன்றை கூறினார்.

2015ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, 'பூஜ்ஜிய நிலம்' என்றழைக்கப்படும் இவ்விடத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற வேளையில், அங்கு, பல்சமய வழிபாட்டை முன்னின்று நடத்தியபோது, அழிவையும், மரணத்தையும் கொணரும் சக்திகளுக்கு மாற்றாக, அனைத்து சமயங்களும் அமைதியையும், வாழ்வையும் கொணரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2018, 15:31