லித்துவேனியா திருத்தூதுப் பயண சின்னமும் விருதுவாக்கும் லித்துவேனியா திருத்தூதுப் பயண சின்னமும் விருதுவாக்கும் 

லித்துவேனியப் பயணத்தில் இறை இரக்கத்தின் ஆண்டவர்

புகழ்மிக்க இறை இரக்கத்தின் ஆண்டவர் ஓவியம், செப்டம்பர் 22ம் தேதி, திருத்தந்தை இளையோருடன் மேற்கொள்ளும் சந்திப்பின்போது, வில்நியூஸ் சதுக்கத்திற்குக் கொண்டுவரப்படும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 22, 23 ஆகிய நாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லித்துவேனியா நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவை, இறை இரக்கத்தின் ஆண்டவர் படத்தை, பல்லாயிரம் புகைப்படங்களைக் கொண்டு உருவாக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளது.

இந்தப் படத்தை உருவாக்க, மக்கள், குறிப்பாக, இளையோர் தங்கள் புகைப்படங்களை செப்டம்பர் 19ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு லித்துவேனிய ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

செப்டம்பர் 22 பிற்பகல் 3 மணிக்கு லித்துவேனியாவின் வில்நியூஸ் பேராலய சதுக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருடன் மேற்கொள்ளும் சந்திப்பின்போது, பல்லாயிரம் புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்படும் இறை இரக்கத்தின் ஆண்டவர் உருவம் அச்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

இறை இரக்கத்தின் ஆண்டவரைக் காணும் பேறுபெற்ற புனித Faustina அவர்களின் மேற்பார்வையுடன், இறை இரக்கத்தின் ஆண்டவர் திரு உருவம், 1934ம் ஆண்டு வில்நியூஸ் நகரில் ஓவியமாகத் தீட்டப்பட்டு, அந்நகரின் திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மிக்க இந்த ஓவியம், செப்டம்பர் 22ம் தேதி, திருத்தந்தை இளையோருடன் மேற்கொள்ளும் சந்திப்பின்போது, வில்நியூஸ் சதுக்கத்திற்குக் கொண்டுவரப்படும் என்று இத்திருத்தூதுப் பயணத்தை ஒருங்கிணைப்போர் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2018, 15:52