தேடுதல்

Vatican News
C9 கர்தினால்கள் அவையின் கூட்டம் C9 கர்தினால்கள் அவையின் கூட்டம்  (Vatican Media)

C9 அவை, திருத்தந்தையுடன் முழு ஒருமைப்பாடு

திருப்பீட தலைமையகச் சீர்திருத்தத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும், கர்தினால்கள் அவை, திருத்தந்தையுடன் தனது முழு தோழமையுணர்வை வெளிப்படுத்தியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

“நம்மை விண்ணகம் செல்ல வைப்பதற்காக, இயேசு இம்மண்ணகம் வந்தார் மற்றும், இதுவே, திருச்சிலுவையின் பேருண்மை” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

இன்னும், அத் லிமினா சந்திப்பையொட்டி, வெனெசுவேலா நாட்டு ஆயர்களை,  இச்செவ்வாய் காலையில், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

C9 அவை, திருத்தந்தையுடன் முழு தோழமை

செப்டம்பர் 10, இத்திங்களன்று, வத்திக்கானில், மூன்று நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ள C9 எனப்படும் கர்தினால்கள் அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தனது முழு ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தியது என்று, இத்திங்கள் மாலையில், திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்தது.

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் தொடர்பாக, கத்தோலிக்கத் திருஅவையில் அண்மையில் பிரச்சனைகள் எழுந்துள்ள சூழலில், இப்பிரச்சனைகள் தொடர்பாக, தேவையான விளக்கங்களைப் பெறுவதற்கு திருப்பீடம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என, திருப்பீட தலைமையகச் சீர்திருத்தத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும், இந்த கர்தினால்கள் அவை கூறியுள்ளது.

C9 கர்தினால்கள் அவை, திருப்பீட தலைமையகச் சீர்திருத்தத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த அவையின் பணிகள், இந்த அவையிலுள்ள சிலரின் வயது காரணமாக இதன் அமைப்பு போன்றவற்றில் மாற்றம் கொண்டுவருவது போன்றவை குறித்தும், திருத்தந்தை சிந்தித்து பார்க்க வேண்டும் என்பது பற்றிய பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, இந்த அவை தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. டப்ளினில் நடைபெற்ற 9வது குடும்பங்களின் உலக மாநாட்டினால் விளைந்துள்ள பலன்கள் பற்றிய, தனது திருப்தியையும், C9 அவை வெளிப்படுத்தியுள்ளது.

இத்திங்களன்று தொடங்கிய C9 கர்தினால்கள் அவையின் 26வது கூட்டம், செப்டம்பர் 12, இப்புதனன்று நிறைவடையும்.

11 September 2018, 15:18