தேடுதல்

ஆப்ரிக்க சிறாரிடையே திருத்தந்தை ஆப்ரிக்க சிறாரிடையே திருத்தந்தை 

ஆப்ரிக்க இளையோரின் கல்விக்கு உதவுங்கள்

ஆப்ரிக்க இளையோர், தங்கள் சொந்த நாடுகளிலேயே கல்வி கற்கும் வசதிகளைப் பெற்று, அங்கேயே அவர்கள் வேலை செய்யும்படியாக, அவர்களுக்காக, செபிப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கடவுள் நம்முடன் இருந்து, நம்மை அன்புகூர்ந்துகொண்டே இருக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 04, இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில், கடவுளின் எல்லையில்லா அன்பு பற்றி பதிவு செய்துள்ள திருத்தந்தை, “வாழ்வின் அர்த்தத்தைக் கிரகித்துக்கொள்வதற்கு  விசுவாசம் நமக்கு உதவுகின்றது என்றும், கடவுள் நம்முடன் இருக்கின்றார் மற்றும், நம்மை வரையறையின்றி அன்புகூர்கின்றார்“ என்றும் கூறியுள்ளார்.

ஆப்ரிக்காவில் இளையோர்

மேலும், செல்வ வளமிக்க ஆப்ரிக்க கண்டத்தின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க வளமான, அக்கண்டத்தின் இளையோரின் கல்விக்கு உதவிகள் ஆற்றப்படுமாறு, செப்டம்பர் மாத செபக் கருத்தில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னல்களால் மேற்கொள்ளப்படுவது அல்லது, இன்னல்களை வாய்ப்புக்களாக மாற்றுவது, இவையிரண்டில் ஒன்றை ஆப்ரிக்க இளையோர் தேர்ந்தெடுக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும், இந்தத் தெளிந்து தேர்தலில், அவர்களுக்கு உதவுவதற்கு மிகச் சிறந்த  வழி, அவர்கள் கல்வி பெற உதவுவதே என்று, கூறியுள்ளார், திருத்தந்தை.

தனது செப்டம்பர் மாத செபக் கருத்து பற்றி, இவ்வாறு காணொளியில் பேசியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்க இளையோர் கல்விபெற வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லையெனில், அவர்கள் எத்தகைய வருங்காலத்தைக் கொண்டிருக்க இயலும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார், திருத்தந்தை.

ஆப்ரிக்க இளையோர், தங்கள் சொந்த நாடுகளிலேயே கல்வி கற்கும் வசதிகளைப் பெற்று, அங்கேயே அவர்கள் வேலை செய்யும் வாய்ப்புக்களைப் பெறும்படியாக, அவர்களுக்காக, செபிப்போம் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2018, 15:34