தேடுதல்

சீனாவில் கத்தோலிக்கர் சீனாவில் கத்தோலிக்கர் 

சீனத் தலத்திருஅவையில் ஒற்றுமை உருவாக நம்பிக்கை

"கடந்த கால காயங்கள் குணமாகி, ஒன்றிப்பு நிலைத்திருக்க, புதியதோர் சூழல் சீனாவில் உருவாகும் என்று நான் நம்புகிறேன்" - திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"புனிதம் நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்திற்கு, இறை அன்பு, மற்றும் அயலவர் அன்பு என்ற இரு கட்டளைகள் வழியே, இயேசு ஒரு எளிய திட்டத்தை தந்துள்ளார்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 27, இவ்வியாழன் வெளியிட்டுள்ளார்.

சீன ஒற்றுமையில் நம்பிக்கை கொள்ளும் திருத்தந்தை

மேலும், சீனாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே, அண்மையில் நிறைவேறியுள்ள  இடைக்கால ஒப்பந்தத்தையடுத்து, சீன கத்தோலிக்கருக்கும், உலக கத்தோலிக்க சமுதாயத்திற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 26, இப்புதனன்று சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டதோடு, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைத்து சீன மக்களுக்கும், இறைவனின் அமைதி எனும் கொடை வழங்கப்படுமாறு செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இச்செய்தி மற்றும் விண்ணப்பம் ஆகியவற்றைத் தொடர்ந்து, இப்புதன் மாலை 6.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சீனாவின் கிறிஸ்தவ வரலாற்றில் உருவாகியுள்ள காயங்கள் குணமாகவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார்.

"சீன கத்தோலிக்கர் அனைவரிடையிலும், கடந்த கால காயங்கள் குணமாகி, ஒன்றிப்பு நிலைக்கவும், அவர்கள், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பண உணர்வுடன் நற்செய்தியின் பறைசாற்றல் பணியில் ஈடுபடவும், புதியதோர் சூழல் சீனாவில் உருவாகும் என்று நான் நம்புகிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

ரோத்தா ரொமானா பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை

மேலும், திருப்பீட நீதித்துறையான ரோத்தா ரொமானா ஏற்பாடு செய்துள்ள ஒரு பயிற்சியில் கலந்துகொள்ள, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 850க்கும் அதிகமான பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 27 இவ்வியாழன் மாலை 5 மணிக்கு புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில், ஊடகங்களின் பங்கேற்பு இல்லாதவண்ணம், தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2018, 15:22