தேடுதல்

லைபீரியாவில் பள்ளிச் சிறார் லைபீரியாவில் பள்ளிச் சிறார் 

கல்வியறிவு பெறுவதற்குரிய உரிமை

உலகில் எழுத்தறிவு பெறாத 78 கோடியே 10 இலட்சத்துக்கு அதிகமான வயது வந்தவர்களில், 75 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர், தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிள் சஹாராவையடுத்த பகுதிகளில் உள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கல்வியறிவு பெறுவதற்குரிய உரிமை இன்றி, வேறு எந்த உண்மையான சுதந்திரமும் கிடையாது என்றும், கல்வி கற்கும் உரிமை, ஒவ்வொரு மனிதரும் தங்களின் வாழ்வை தாங்களே அமைத்துக்கொள்வதற்கு வழியமைக்கின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 08, இச்சனிக்கிழமையன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, கல்வியறிவின் முக்கியத்துவம் பற்றி, செப்டம்பர் 07, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்துலக எழுத்தறிவு நாள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவால் 1965ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, அனைத்துலக எழுத்தறிவு நாள், 1966ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 08ம் நாளன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தனிமனிதர் மற்றும் சமூகங்கள் மத்தியில் எழுத்தறிவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்த உலக நாள் உருவாக்கப்பட்டது.

“எழுத்தறிவும், வளர்ச்சித் திறமைகளும்” என்ற தலைப்பில், இச்சனிக்கிழமையன்று, அனைத்துலக எழுத்தறிவு நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

15 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எழுத்தறிவு பற்றி 2015ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலகில் 86.3 விழுக்காட்டினர், எழுத்தறிவு பெற்றவர்கள். இவர்களில் ஆண்கள் 90 விழுக்காடு மற்றும் பெண்கள் 82.7 விழுக்காடு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2018, 15:03