தேடுதல்

அன்னை தெரேசாவின் புனிதர் பட்டமளிப்பு விழா அன்னை தெரேசாவின் புனிதர் பட்டமளிப்பு விழா 

புனித அன்னை தெரேசாவே, எங்களுக்காக மன்றாடுவீர்! - திருத்தந்தை

"வறியோரின் துயர் துடைக்கும் முயற்சிகள் வழியே, அன்னை தெரேசா, உலகில் அமைதியை உறுதி செய்யும் வழிகளை உருவாக்கினார்" - 1976ம் ஆண்டு அன்னை தெரேசா அவர்களுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட வேளையில் பதிவு செய்யப்பட்ட கூற்று.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித அன்னை தெரேசாவின் திருநாளும், அவரது நினைவாக, ஐ.நா. அவை சிறப்பிக்கும் பன்னாட்டு பிறரன்பு நாளும், செப்டம்பர் 5, இப்புதனன்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தியொன்றைப் பதிவு செய்திருந்தார்.

"அமைதியை, உன் வாழ்வால், புன்சிரிப்பால், பிறரன்புச் சேவையால் மற்றவர்களுக்கு வழங்க, அதை, உங்களுடன் ஏந்திச் செல்லுங்கள். புனித அன்னை தெரேசாவே, எங்களுக்காக மன்றாடுவீர்!" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிட்டார்.

கத்தோலிக்கத் திருஅவையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி, 2016ம் ஆண்டு  சிறப்பிக்கப்பட்ட வேளையில், இரக்கத்தின் தூதராக இவ்வுலகில் வாழ்ந்த அருளாளர் அன்னை தெரேசாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4ம் தேதி, புனிதராக உயர்த்தினார்.

பிறரன்புப் பணிக்கென தன் வாழ்வை அர்ப்பணித்து, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையையும் நிறுவிய அன்னை தெரேசா அவர்கள், 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, இறையடி சேர்ந்ததையடுத்து, அவர்களின் வாழ்வை நினைவுகூரும் வகையில், 2012ம் ஆண்டு, ஐ.நா. அவை, செப்டம்பர் 5ம் தேதியை, பன்னாட்டு பிறரன்பு நாளென அறிவித்தது.

அன்னையின் நினைவாக, செப்டம்பர் 5ம் தேதியை, பன்னாட்டு பிறரன்பு நாளென ஐ.நா. அவை அறிவிக்க வேண்டுமென்று, 2012ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி, ஹங்கேரி நாடு பரிந்துரை செய்தபோது, ஆல்பேனியா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 44 ஐ.நா.அவை உறுப்பு நாடுகள், இந்தப் பரிந்துரைக்கு ஆதரவு அளித்ததையடுத்து, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2013ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் பன்னாட்டு பிறரன்பு நாளையொட்டி, பல்வேறு நாடுகளில் வறியோரின் துயர் துடைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2018, 15:12