பெனடிக்ட் பெண்கள் துறவு சபைகள் கூட்டமைப்பினர் சந்திப்பு பெனடிக்ட் பெண்கள் துறவு சபைகள் கூட்டமைப்பினர் சந்திப்பு 

பெனடிக்ட் சபையினரின் விருந்தோம்பல் பண்பு

உலகெங்கும் மறைப்பணியாற்றுகின்ற, புனித பெனடிக்ட் பெண்கள் துறவு சபைகளின் கூட்டமைப்பு, உரோம் நகரில் உலகளாவிய கூட்டம் ஒன்றை நடத்துகின்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கனிவு, பரிவன்பு, இரக்கம், ஏற்பு ஆகிய பண்புகளை, தங்கள் வாழ்வில் பிரதிபலிக்கும் வழிகளைத் தேடும் ஏராளமான மக்களுக்கு, மதிப்புமிக்க சான்று வாழ்வு எனும் கொடையை பெனடிக்ட் சபையினர் வழங்கி வருகின்றனர் என்று பாராட்டினார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பெனடிக்ட் அவர்களின் கொள்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட, “கிறிஸ்துவில் அனைவரும் வரவேற்கப்பட வேண்டியவர்கள்” எனும் தலைப்பில், உரோம் நகரில் 8வது உலகளாவிய கூட்டம் நடத்திவரும், பெனடிக்ட் சபையின் அனைத்து பெண் ஆதீனத் துறவிகள் மற்றும் அருள்சகோதரிகள் 120 பேரை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெனடிக்ட் சபையினர், விருந்தோம்பல் பண்பை சிறப்பாகக் கொண்டிருக்கின்றனர் என்று பாராட்டினார்.

செபத்தின் முக்கியத்துவம்

பெனடிக்ட் துறவு சபையினரின் வாழ்வில், செபம், குறிப்பாக, ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்குபெறுவது மற்றும் திருப்புகழ்மாலை சொல்வது  மையமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் இச்சபையினர் சொல்லும் செபம், திருஅவையின் மூச்சை வளப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

கடவுளின் கொடைகளைப் பராமரித்தல்

பெனடிக்ட் பெண்கள் துறவு சபையினர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறப்பு அக்கறை எடுத்துக்கொள்வது குறித்து பாராட்டிய திருத்தந்தை, இவர்கள், இவ்வுலகில் கடவுளின் கொடைகளை நன்றாக நிர்வகிக்கின்றனர் என்பதை தான் அறிவதாகச் சொல்லி, அவர்களை ஊக்குவித்தார்.

திருஅவையும் மரியாவும்

நன்மைத்தனம், விசுவாசம், மனத்தாராளம், திருஅவையின் தூய அன்னையாகிய கன்னி மரியாவைப் பின்பற்றுதல் ஆகியவை வழியாக, திருஅவையின் வாழ்வுக்கு மதிப்புமிக்க கொடையை அளிக்கின்ற நீங்கள், திருஅவை மற்றும் அன்னை மரியின் அடையாளங்கள் என்றும், உங்களைப் பார்ப்பவர்கள், தாய் திருஅவையையும், கிறிஸ்துவின் தாயாம் மரியாவையும் காண்கின்றனர் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெனடிக்ட் பெண்கள் துறவு சபைகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2018, 15:33