தேடுதல்

Vatican News
நிக்கராகுவா அரசுத்தலைவருக்கு எதிராக பேரணி நிக்கராகுவா அரசுத்தலைவருக்கு எதிராக பேரணி  (AFP or licensors)

நிக்கராகுவா அரசுத்தலைவருக்கு திருத்தந்தை செய்தி

நிக்கராகுவாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இடம்பெற்றுவரும் சமூக-அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்ட வன்முறைகளில், ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்துள்ளவேளை, நாட்டில் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நிக்கராகுவா நாட்டிற்கு, உடன்பிறப்பு உணர்வு கொண்ட ஒப்புரவு மற்றும், அமைதியும், ஆதரவும் நிறைந்த நல்லிணக்கத்தை, அமைதியின் இளவரசராம் இயேசு அருள்வாராக என்று, அந்நாட்டு அரசுத்தலைவருக்கு செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 15, வருகிற சனிக்கிழமையன்று, நிக்கராகுவா நாடு, தனது 197வது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கவுள்ளதையொட்டி, அந்நாட்டு அரசுத்தலைவர் டானியேல் ஒர்தேகா அவர்களுக்கு செய்தி அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புக்குரிய அந்நாட்டு மக்களுக்கு, தன் வாழ்த்தையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நிக்கராகுவா கத்தோலிக்க திருஅவையும், நாட்டில் உரையாடல் வழியாக அமைதி கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. அத்துடன், நாட்டின் தற்போதைய நெருக்கடிகளை அகற்றுவதற்கு, 2021ம் ஆண்டில் நடத்தப்படுவதாய் திட்டமிடப்பட்டுள்ள பொதுத்தேர்தலை, 2019ம் ஆண்டில் நடத்துமாறு, அரசுத்தலைவர் ஒர்தேகா அவர்களை விண்ணப்பதித்துள்ளது, தலத்திருஅவை.

மத்திய அமெரிக்காவில் பெரிய நாடாகிய நிக்கராகுவாவை, 16ம் நூற்றாண்டில் இஸ்பானிய பேரரசு தனது காலனியாக மாற்றியது. பின்னர், நிக்கராகுவா 1821ம் ஆண்டு, இஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது.

11 September 2018, 15:07