திருத்தந்தை, மொசாம்பிக் அரசுத்தலைவர் சந்திப்பு திருத்தந்தை, மொசாம்பிக் அரசுத்தலைவர் சந்திப்பு 

திருத்தந்தை, மொசாம்பிக் அரசுத்தலைவர் சந்திப்பு

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், அரசுத்தலைவர் Nyusi

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மொசாம்பிக் நாட்டின் அரசுத்தலைவர் Filipe Jacinto Nyusi அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, செப்டம்பர் 14, இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருப்பீடத்திற்கும், மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், மொசாம்பிக்கில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பல்வேறு சமூகநலப் பணிகள், குறிப்பாக, அந்நாட்டில் திருஅவையின் பணிகளை எளிதாக்குவதற்கு 2011ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் போன்றவை, இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.

மேலும், மொசாம்பிக் நாட்டின் சமூக-அரசியல் சூழல், நிலைத்த, நீடித்த அமைதியைக் கொண்டுவருவதற்கு, தற்போது அந்நாட்டில் இடம்பெற்றுவரும் தேசிய ஒப்புரவு நடவடிக்கைகள், வறுமை மற்றும் ஊழல் ஒழிப்புச் செயல்பாடுகள், அந்நாட்டிற்கும், ஏனைய நாடுகளுக்கும் இடையேயுள்ள பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்களும் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.

மொசாம்பிக் அரசுத்தலைவர்

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மொசாம்பிக் அரசுத்தலைவர் Nyusi அவர்கள், 2019ம் ஆண்டில், திருத்தந்தை மொசாம்பிக் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள தான் அழைப்பு விடுத்ததாகவும், ‘நான் உயிரோடு இருந்தால்’ என்று, திருத்தந்தை புன்னகையுடன் பதில் சொன்னார் எனவும் கூறியுள்ளார். 

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய மொசாம்பிக்கில், 1498ம் ஆண்டில் வாஸ்கோட காமா அவர்கள் சென்றிறங்கியதைத் தொடர்ந்து அந்நாட்டில் போர்த்துக்கீசியர்கள், சிறிதாக சிறிதாகக் குடியேறத் தொடங்கினர். பின்னர், 1505ம் ஆண்டில் அந்நாட்டை தனது காலனி நாடாக அவர்கள் மாற்றினர். நானூறு ஆண்டுகளுக்கு அதிகமான போர்த்துக்கீசிய ஆட்சிக்குப் பின்னர், 1975ம் ஆண்டில் மொசாம்பிக் நாடு விடுதலையடைந்தது. போர்த்துக்கீசியம், மொசாம்பிக்கின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2018, 16:10