தேடுதல்

திருத்தந்தையைச் சந்தித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்கள் திருத்தந்தையைச் சந்தித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்கள் 

அமெரிக்க ஆயர்கள் திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பு

பாலியல் முறைகேடுகள் என்ற பிரச்சனையைக் குறித்து திருத்தந்தையுடன் கலந்துபேச, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர்கள் வத்திக்கானுக்கு வருகை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலியல் முறைகேடுகள் என்ற பிரச்சனையின் விளைவாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலத் திருஅவை சந்தித்துவரும் சவால்களைக் குறித்து கலந்துபேச, அந்நாட்டு ஆயர் பேரவையின் உயர் மட்டத் தலைவர்கள், செப்டம்பர் 13, இவ்வியாழன் மதியம் 12 மணிக்கு, திருத்தந்தையைச் சந்தித்தனர்.

அமெரிக்க ஜக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டி’னார்டோ, துணைத்தலைவர் பேராயர் ஹோஸே ஹொராசியோ கோமஸ், செயலர், அருள்பணி பிரையன் பிரான்ஸ்ஃபீல்டு ஆகியோருடன், சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் தலைவரும், பாஸ்டன் பேராயருமான, கர்தினால் பாட்ரிக் ஓ’மேலி அவர்களும், திருத்தந்தையைச் சந்தித்தனர்.

மேலும், இவ்வியாழன் காலை 9.30 மணிக்கு, சுலோவாக்கியா நாட்டின் தூதராக, திருப்பீடத்தில் பணியாற்ற புதிதாக நியமனம் பெற்றுள்ள Marek Lisénsky அவர்களின் நற்சான்றிதழ் மடலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதற்கிடையே, கொலம்பியா நாட்டில் இயங்கி வரும் தேசிய விடுதலைப் படை என்ற இயக்கத்தினரால் கடத்தப்பட்டவர்களில் ஆறுபேரை, இவ்வியக்கத்தினர் செப்டம்பர் 12 இப்புதனன்று விடுவித்துள்ளனர் என்று அந்நாட்டு தலத்திருஅவை அறிவித்துள்ளது.

கொலம்பிய அரசுக்கும், விடுதலை இயக்கங்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதற்கு, இந்நிகழ்வு ஓர் உந்து சக்தியாக அமையும் என்று கொலம்பிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஆஸ்கர் உர்பீனா ஒர்த்தேகா அவர்கள் கூறியுள்ளார்.

கொலம்பியா நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசுக்கும், போரிடும் அமைப்புக்களுக்கும் இடையே நிலவிவந்த மோதல்களை முடிவுக்குக் கொணர, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், 2017ம் ஆண்டு அந்நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணமும் அந்நாட்டில் அமைதியைக் கொணர பெரிதும் உதவியாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2018, 15:39