தேடுதல்

Vatican News
வலென்சியா உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்கள் சந்திப்பு வலென்சியா உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்கள் சந்திப்பு  (Vatican Media)

வலென்சியா அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை

அருள்பணியாளர்கள் கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதன் வழியாக, மற்றவரைச் சந்திப்பதற்குச் சக்தியைப் பெறுகின்றனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்த உலகில் நம்மைச் சிக்கவைக்கும் மற்றும், இறைவனிடமிருந்தும், நம் சகோதரர்களிடமிருந்தும் விலக்கி வைக்கும் எல்லாவிதமான உலகப்போக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழுமாறு, அருள்பணியாளர்கள் குழு ஒன்றிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்பெயின் நாட்டின் வலென்சியா உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள், உயர்மறைமாவட்ட அதிகாரிகள் என, ஏறத்தாழ நாற்பது பேரை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வலென்சியா, புனிதர்களின் பூமி என்றும், இவ்வாண்டில் அப்புனிதர்களில் ஒருவராகிய, வின்சென்ட் ஃபெரெர் அவர்களின் யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது என்றும் கூறினார்.

செபம், நற்செய்தி அறிவிப்பதற்கு கிடைத்துள்ள அழைப்புக்குப் பணிந்து நடத்தல், கிறிஸ்துவில் சுதந்திரம் ஆகியவை, இயேசு கிறிஸ்துவோடு நட்புறவையும், ஒன்றிப்பையும் காப்பதற்கு, அருள்பணியாளர்களுக்கு அவசியான மூன்று அடிப்படை கூறுகள் என, புனித வின்சென்ட் ஃபெரெர் அவர்கள் சொல்லியுள்ளதைக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் அருள்பணியாளருக்கும், செபம் உணவாக அமைந்துள்ளது என்றும், செபமின்றி வாழும் அருள்பணியாளர், தன் வாழ்வில் தோல்வியடைந்தவராக, மறைப்பணியில் துன்புறுவார் என்றுரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு படைப்புயிர்க்கும் நற்செய்தியின் மகிழ்வை வழங்குவதில், உலகின்முன் சான்றுகளாக வாழ்வதற்கு, அருள்பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

மேலும், வலென்சியா உயர்மறைமாவட்டம், புலம்பெயர்ந்தோருக்கும், அதிகத் தேவையில் இருப்போருக்கும் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவனின் பிரசன்னம் தேவைப்படும் மக்களுக்கு, அதை உணரவைக்கும் பணியை தொடர்ந்து ஆற்றுமாறும், இக்கால உலகில் அருள்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் இது ஒன்றாக உள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

21 September 2018, 15:09