கப்புச்சின் சபை பிரதிநிதிகள் சந்திப்பு கப்புச்சின் சபை பிரதிநிதிகள் சந்திப்பு 

திருத்தந்தை, கப்புச்சின் சபை பிரதிநிதிகள் சந்திப்பு

கடவுளின் பண்புகளான, தாழ்மை மற்றும் எளிமையை, அனைத்து கிறிஸ்தவர்களும் தங்கள் வாழ்விலும், பணியிலும் கடைப்பிடிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 14, இவ்வெள்ளியன்று, கப்புச்சின் துறவு சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னல்களைக் கண்டு சோர்ந்துபோகாமல், ஏழைகள் மற்றும் துன்புறும் மக்களுக்கு ஆற்றும் பணிகளைத் தொடருமாறு ஊக்கப்படுத்தினார்.

நற்செய்தியின் மகிழ்வை வெளிப்படுத்திய, அசிசி நகரின், ஏழை மனிதர் புனித பிரான்சிஸ் அவர்களைப் பின்பற்றி வாழுமாறு கூறியத் திருத்தந்தை, தாழ்மை மற்றும் எளிமையை, வாழ்விலும், பணியிலும் கடைப்பிடிக்குமாறு கூறினார்.

கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் மிகவும் துணிச்சலுடன் சான்று பகர்ந்தவர்களை கப்புச்சின் துறவு சபை வரலாற்றில் பெருமளவில் காண முடிகின்றது என்றும், இவர்களில் பலர், மறைசாட்சிகளாகவும் இறந்துள்ளனர், மேலும் பலர், அருளாளர்கள் மற்றும் புனிதர்களாகப் போற்றப்பட்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இவர்களின் தூய வாழ்வு, கப்புச்சின் சபையின் தனிவரத்தை எடுத்துரைப்பதாய் உள்ளது என்றும், மறைப்பணித்தளங்களில் ஆயர்கள் மற்றும் பிற திருஅவை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுமாறும், இச்சபையினரையிடம் திருத்தந்தை பரிந்துரைத்தார்.

‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்... நீங்கள் கண்டுகொள்வீர்கள்’ என்ற நற்செய்தியின் திருச்சொற்களை மையப்படுத்தி பொதுப்பேரவையை நடத்திவரும் இச்சபையினருக்குத் தன் செபங்களையும் வாழ்த்தையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2018, 16:24