"திருமணமும், குடும்பமும்" என்ற கருத்தரங்கில் பங்கேற்ற 850 உறுப்பினர்களுடன் திருத்தந்தை "திருமணமும், குடும்பமும்" என்ற கருத்தரங்கில் பங்கேற்ற 850 உறுப்பினர்களுடன் திருத்தந்தை 

குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர்

திருமண அருளடையாளத்தை முன்னின்று நிகழ்த்தும் அருள் பணியாளர்களுக்கு, குடும்ப வாழ்வை மேற்கொள்வோருடன் இணைந்து பயணிக்கும் கடமையும் உள்ளது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்ப வாழ்வை உயர்த்திப்பிடித்த திருத்தந்தையரின், குறிப்பாக, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வழியைத் தொடர்ந்து, தானும் குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்து வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 27, இவ்வியாழன் மாலை வழங்கிய ஓர் உரையில் கூறினார்.

உரோம் மறைமாவட்டமும், வத்திக்கான் நீதித்துறையும் இணைந்து, "திருமணமும், குடும்பமும்" என்ற மையக்கருத்துடன், ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்ற 850 உறுப்பினர்களை, இவ்வியாழன் மாலை 5 மணிக்கு, உரோம் நகர் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

குடும்ப வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளின் பின்னணி

திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் உருவாகும் பல பிரச்சனைகளின் பின்னணியில், சரியான புரிதல் இல்லா நிலையும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் உள்ளன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

திருமணத்திற்கு முன்னர், இளையோருக்கு ஒரு சில வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும், அவர்களுக்கு, திருமணத்தையும், குடும்ப வாழ்வையும் குறித்த பாடங்கள் தொடர்ந்து வழங்கப்படுவது அவசியம் என்று, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

அருள்பணியாளரின் கடமை தொடர்கிறது

திருமண அருளடையாளத்தை முன்னின்று நிகழ்த்தும் அருள் பணியாளர்கள், அத்துடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதென்று எண்ணாமல், குடும்ப வாழ்வை மேற்கொள்வோருடன் இணைந்து பயணிக்கும் கடமையும் உள்ளதென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் நிறுவப்பட்டுள்ள குடும்பப்பணி மையங்கள், திருமண அருளடையாளத்தை பெற்றவர்களை மட்டுமல்லாமல், இந்த அருளடையாளத்தைப் பெறாமல் இணைந்து வாழ்வோரையும் வரவேற்று, அவர்களுக்கு, இவ்வருள் அடையாளத்தின் மேன்மையை உணர்த்த வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2018, 16:21