கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் 

கிறிஸ்தவ ஒன்றிப்பு, தூய ஆவியாரின் செயல் - திருத்தந்தை

செபித்தல், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், தேவையில் இருப்போருக்குப் பணியாற்றுதல், போன்ற செயல்பாடுகளில், அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து பணியாற்ற முடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோமைய ஆயர் என்ற முறையில், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பிற்காக, நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் உங்களுக்கும், உங்கள் பணிகளுக்கும் நன்றி கூறுகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 60க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகளை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இத்திருப்பீட அவை வழியே அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய முயற்சிகள்

கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபை பிரதிநிதிகளுடன், இத்தாலியின் பாரியில் நடைபெற்ற சந்திப்பு, கிறிஸ்தவ ஒன்றிப்பு உலக அவையின் உறுப்பினர்களுடன் ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பு, மற்றும் உரோம் நகரில் பெந்தக்கோஸ்து சபையினருடன் நிகழ்ந்த சந்திப்பு ஆகியவற்றை திருத்தந்தை தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

"பெந்தக்கோஸ்து சபையினர், அருங்கோடை இயக்கத்தினர், ஏவாஞ்செலிக்கல் சபையினர்: ஒன்றிப்பு என்ற எண்ணத்தின் தாக்கம்" என்ற மையக்கருத்துடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் இவ்வாண்டு கூட்டம் நடைபெற்றதை பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஒன்றிப்பின் ஒரு சில அம்சங்கள் குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கிறிஸ்தவ சபைகள் இணைந்து ஆற்றக்கூடிய பணிகள்

கிறிஸ்தவ சபைகள் அனைத்தும், தங்கள் வேறுபாடுகளை விலக்கிவைத்துவிட்டு, இணைந்து வந்து ஆற்றக்கூடிய செயல்பாடுகள் உள்ளன என்பதைக் கூறிய திருத்தந்தை, செபித்தல், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், தேவையில் இருப்போருக்குப் பணியாற்றுதல், நற்செய்தியை அறிவித்தல், மற்றும் மனித வாழ்வின் மேன்மையைப் பாதுகாத்தல் என்ற செயல்பாடுகளில், அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து பணியாற்ற முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

ஒன்றிப்பு நோக்கி நடத்திச் செல்பவர் தூய ஆவியார்

தனிப்பட்ட மறையுரையாளர்களால் ஈர்க்கப்பட்டு உருவாகும் சிறு, சிறு சபைகளில் உணர்ச்சிப்பூர்வமான பங்கேற்புகள் நிகழ்வதைக் காண்கிறோம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய போக்கினை, மேய்ப்புப்பணிக்கே உரிய அக்கறையோடு நாம் ஆய்வு செய்வது நல்லது என்று எடுத்துரைத்தார்.

தூய ஆவியாரே படைப்பாற்றலும், படைப்பை புதுப்பிக்கும் ஆற்றலும் கொண்டவர் என்றும், அவரே, நம்மை ஒன்றிப்பின் வழியில் அழைத்துச் செல்பவர் என்றும் திருத்தந்தை இவ்வுரையின் இறுதியில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2018, 15:41