தேடுதல்

திருத்தந்தையின் பிலிப்பீன்ஸ் திருத்தூதுப்பயணம் திருத்தந்தையின் பிலிப்பீன்ஸ் திருத்தூதுப்பயணம் 

தண்ணீரைப் பராமரிப்பது இன்றியமையாத கடமை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டின் இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாளுக்கு வெளியிட்ட செய்தியில், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி பற்றிய அறிவிலும், அதை மதிப்பதிலும் இளைய தலைமுறை வளரவேண்டுமென செபித்துள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நாம் பொறுப்புணர்வோடு படைப்பைப் பாதுகாக்க இயலாமல் இருக்கின்றோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 1, இச்சனிக்கிழமையன்று, நான்காவது ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்ட, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாளில் வெளியிட்ட  செய்தியில் கூறியுள்ளார்.  

மிகவும் எளிமையான மற்றும் மதிப்புமிக்க தண்ணீர் பற்றி இச்செய்தியில் குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, உலகில் ஒவ்வொருவரும் பாதுகாப்பான குடிநீர் வசதியைப் பெறவேண்டியது, அடிப்படையான மற்றும் உலகளாவிய மனித உரிமை, ஆனால், இதை ஏராளமான மக்கள் பெற வசதியின்றி உள்ளனர் என்று கூறியுள்ளார்.  

இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை, ஏழைகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் மயமாக்குவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், ஏழைகளைப் புறக்கணிப்பது, வாழ்வைப் புறக்கணிப்பதாகும் என்றும் கூறியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பிலும், மனித முன்னேற்றத்திலும், முக்கிய பங்காற்றும் தண்ணீரைப் போன்று, வேறு எதுவும் இப்பூமிக்கோளத்தில் எளிமையானதாகவும், பயனுள்ளதாகவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி என்ற கொடைக்காகவும்,  நாம் பெற்றுள்ள சகோதரி தண்ணீருக்காகவும், இறைவனுக்கு முதலில் நன்றி சொல்ல விரும்புவதாகக் கூறியுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு, பல்வேறு திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் வழியாக ஊக்குவித்துவரும் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கடல்கள் மற்றும், பெருங்கடல்கள்

கிறிஸ்தவர்களுக்கு, தண்ணீர், தூய்மை மற்றும் வாழ்வின் இன்றியமையாத பொருள் என்றுரைத்துள்ள திருத்தந்தை, படைத்தவரின் வியத்தகு கொடைகளான, கடல்கள் மற்றும், பெருங்கடல்கள், பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பப்பட நாம் அனுமதிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

எல்லாமே கடவுளின் பராமரிப்பைச் சார்ந்துள்ளது என்று நாம் செபிக்க வேண்டும் மற்றும், அனைத்துமே நம்மைச் சார்ந்துள்ளது என பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, புலம்பெயர்ந்தவர், காலநிலை மாற்றம் போன்ற இக்காலத்தில் மக்களை அதிகம் பாதிக்கும் விவகாரங்களில், அரசியல் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கடல்நீர், மக்களைப் பிரிப்பதன் அடையாளமாக இல்லாமல், மனித சமூகம் சந்திக்கும் இடமாக அமைவதற்கும், நல்லதொரு வருங்காலத்தைத் தேடிவரும் பயணத்தில், கடல்களில் தங்கள் வாழ்வை இழக்கின்றவர்களுக்காகவும் செபிப்போம் என்றும், திருத்தந்தை தன் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோர்க்கு, சிறப்பான பணியாற்றும் அரசியல் மற்றும் ஏனைய மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் நன்றியும் பாராட்டும் சொல்லி, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"தண்ணீர், மதிப்புமிக்க பொருள் மற்றும், அது மனித உரிமை என்ற கருத்தில் தண்ணீர் மதிக்கப்பட வேண்டும்" என்ற தலைப்பில் திருத்தந்தை இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2018, 14:20