புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

சீன கத்தோலிக்கருக்கு திருத்தந்தையின் சிறப்பான செய்தி

இயேசு சபை அருள்பணியாளர் மத்தேயோ ரிச்சி காலம் முதல், சீன தலத்திருஅவை, மாற்றங்களை ஏற்றுக்கொள்ள திறந்த மனம் கொண்டதாய் விளங்கி வந்துள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவில் வாழும் கத்தோலிக்கருக்கும், அகில உலக திருஅவைக்கும் சிறப்பான ஒரு செய்தியை செப்டம்பர் 26, இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

"ஆண்டவரே... நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு" (திருப்பாடல் 100) என்ற சொற்களுடன் திருத்தந்தையின் இச்சிறப்புச் செய்தி ஆரம்பமாகிறது.

துன்புறும் சீன கத்தோலிக்கர்

திருப்பீடத்திற்கும், சீனாவின் மக்கள் குடியரசுக்கும் இடையே அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஓர் ஒப்பந்தம், சீன மக்கள் மனங்களில், குறிப்பாக, பேதுருவின் வழித்தோன்றலுக்கு பிரமாணிக்கமாக வாழ்ந்ததால், பல ஆண்டுகளாக துன்புற்றுவரும் கத்தோலிக்கர் மனங்களில், குழப்பத்தை உருவாக்கியுள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிடுகிறார்.

துன்புறுவோர் அனைவரையும், சீன மக்கள் அனைவரையும் தான் செபங்களில் ஒவ்வொரு நாளும் நினைவுகூர்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இத்துன்பங்கள் அனைத்திற்கும் தகுந்த பலன் உண்டு என்பதை உறுதியளிக்க "கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்" (தி.பா. 126) என்ற திருப்பாடலின் சொற்களை நினைவுகூர்ந்துள்ளார்.

திறந்தமனம் கொண்ட சீன தலத்திருஅவை

இயேசு சபை அருள்பணியாளர் மத்தேயோ ரிச்சி அவர்களின் காலம் முதல், சீன தலத்திருஅவை, மாற்றங்களை ஏற்றுக்கொள்ள திறந்த மனம் கொண்டதாய் விளங்கி வந்துள்ளது என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரலாற்றில், பல முறை, சீன அரசுடன், ஒப்பத்தங்களை உருவாக்க, திருப்பீடம் முயன்று வந்துள்ளது என்பதைக் காட்ட, சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவை, இவ்வுலக மக்களை, குறிப்பாக, வறியோரையும், துன்புறுவோரையும் அரவணைக்க, தன்னிலிருந்து வெளியேறவேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் விடுத்த அழைப்பை தன் செய்தியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, இதைத் தொடர்ந்து, திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் மற்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோரின் தலைமைப்பணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயர்களின் நியமனம்

சீன மக்களுக்கும், திருஅவைக்கும் இடையே உருவாகவேண்டிய ஒற்றுமைக்கு, ஒரு முக்கிய சவாலாக, ஆயர்களின் நியமனம் அமைந்துள்ளது என்பதை இச்செய்தியின் மூன்றாம் பகுதியில் சிறப்பாகக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீண்ட, தனிப்பட்ட சிந்தனைகளுக்கும், செபங்களுக்கும் பின்னர், திருப்பீடத்தின் ஒப்புதல் இன்றி சீன அரசால் நியமிக்கப்பட்ட ஏழு ஆயர்களை, கத்தோலிக்க ஆயர்களின் பாரம்பரிய வழியில் இணைக்க தான் முடிவு செய்துள்ளதையும், அதேவேளை, அந்த ஆயர்கள், பேதுருவின் வழித்தோன்றலுக்கு முழு கீழ்ப்படித்தலை வழங்குவது குறித்து உறுதி செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் இரக்கத்திற்கு கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ள தன் தலைமைப் பணியின் ஆறாம் ஆண்டில், சீன கத்தோலிக்கர்கள் அனைவரும் ஒப்புரவை நோக்கி தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் திருத்தந்தை, திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமுகத்தில், "இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்" (2 கொரி. 5:18) என்று கூறியுள்ள சொற்களை நினைவுறுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்தை வரவேற்க அழைப்பு

11 சிறு பிரிவுகளைக் கொண்ட இச்சிறப்புச் செய்தி வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவில் வாழும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுமக்கள் அனைவரையும், நம்பிக்கையோடும், துணிவோடும், எதிர்கால கண்ணோட்டத்தோடும் இந்த புதிய முயற்சியை வரவேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே துவங்கியுள்ள இந்த புதிய ஒப்பந்த முயற்சி, தலத்திருஅவை அளவில், இன்னும் திறந்த மனம் கொண்ட உரையாடல் வழியாக முழுமை அடைவதே தன் விருப்பம் என்பதை, திருத்தந்தை இச்செய்தியின் வழியே வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இச்சிறப்புச் செய்தியின் இறுதியில், அன்னை மரியாவை நோக்கி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பியுள்ள செபத்தில், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய ஓர் உலகை உருவாக்கும் முயற்சிகளிலும், மன்னிப்பு வழங்கும் முயற்சிகளிலும், சமாதானத்தின் அரசியான அன்னை மரியா துணை புரியவேண்டும் என்று மன்றாடியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2018, 15:58