மறைப்பணி நாடுகளின் புதிய ஆயர்கள் சந்திப்பு மறைப்பணி நாடுகளின் புதிய ஆயர்கள் சந்திப்பு  

ஆயர்கள், தந்தையராகச் செயல்படுமாறு..

குடும்பங்கள், இளையோர், குருத்துவ கல்லூரிகள், ஏழைகள் ஆகியோருக்கு ஆயர்கள் தங்கள் பணியில் சிறப்பிடம் அளிக்க வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

செப மனிதராகவும், அதிகாரப்போக்கையும், உலகப்போக்கையும் துறந்தவராகவும், நற்செய்தி அறிவிப்பாளராகவும், ஒன்றிப்பை ஊக்குவிப்பவராகவும், ஆயர்கள் திகழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நற்செய்தி அறிவிப்பு பேராயம், மறைப்பணி நாடுகளில் அண்மை மாதங்களில் நியமனம் பெற்ற ஆயர்களுக்கு உரோம் நகரில் நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்கின்ற எழுபதுக்கும் அதிகமான ஆயர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரிடமிருந்து விலகி இருந்து, அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறவர்களாக இல்லாமல், அக்கறையுள்ள தந்தையராக இருக்குமாறு, ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.

நல்ல ஆயராம் இயேசுவைப் போன்று, தனக்காக வாழாமல் பிறருக்காகப் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள ஆயர்கள், மக்கள் மத்தியில் இயேசுவைக் கொணர்ந்து, நற்செய்தியை அறிவித்து, தங்களையே முற்றிலும் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

ஆயர் செப மனிதர்

தெளிவான அதேநேரம், உறுதியான வார்த்தைகளால் உரையாற்றிய திருத்தந்தை, ஓர் ஆயர், செப மனிதராக இருக்க வேண்டும் என்று கூறிய அதேவேளை, ஒவ்வோர் ஆயரும் ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் செபிக்கின்றனர் என்ற கேள்வியையும் கேட்டார். ஒவ்வொரு நாளின் சூழல்களையும், மக்களையும் ஆண்டவரிடம் ஆயர்கள் கொண்டு வரவேண்டும் என்றும், தனது மந்தைக்காக, கடவுளோடு கலந்துரையாடும் துணிச்சலை ஆயர்கள் பெற்றிருக்க வேண்டுமென்றும், திருத்தந்தை கூறினார்.

ஆயர்கள், வசதி வாழ்வில் ஆனந்தம் அடையாமலும், இளவரசர் போன்று உணராமலும்  இருந்து மற்றவர்க்காகப் பணியாற்ற வேண்டும் எனவும் உரைத்த திருத்தந்தை, மறைமாவட்டத்தைவிட்டு அடிக்கடி வெளியே செல்லக் கூடாது என்றும் கூறினார்.

உரோம் புனித பவுல் கல்லூரியில் நடைபெறும் இக்கருத்தரங்கில், நான்கு கண்டங்களின் 34 நாடுகளிலிருந்து 74 ஆயர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழகம் உட்பட, ஆசியாவிலிருந்து 8, ஓசியானியாவிலிருந்து 6, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து 3, மற்றும், 17 ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் ஆயர்கள் கலந்துகொள்கின்றனர். செப்டம்பர் 03, இத்திங்களன்று ஆரம்பித்துள்ள இக்கருத்தரங்கு, செப்டம்பர் 15ம் தேதி நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2018, 15:38