தேடுதல்

உலக குடும்பங்கள் கூட்டத்திற்கு திருத்தந்தை வழங்கிய காணொளிச் செய்தி - கோப்புப் படம் உலக குடும்பங்கள் கூட்டத்திற்கு திருத்தந்தை வழங்கிய காணொளிச் செய்தி - கோப்புப் படம் 

வேதியர் கருத்தரங்கிற்கு காணொளிச் செய்தி

‘வேதியர், மறையுண்மையின் சான்று’ என்ற தலைப்பில் வத்திக்கானில் செப்டம்பர் 20, இவ்வியாழனன்று தொடங்கியுள்ள கருத்தரங்கில் 48 நாடுகளிலிருந்து ஏறக்குறைய 1,500 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இது செப்டம்பர் 23, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  லித்துவேனியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டாலும், திருஅவையின் நிகழ்வுகளையும் நினைவில் வைத்து, உரோம் நகரில், புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வோரிடம், ஒரு காணொளிச் செய்தி வழியாகப் பேசியுள்ளார். ‘வேதியர், மறையுண்மையின் சான்று’ என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் 48 நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் ஏறக்குறைய 1,500 பிரதிநிதிகளுக்கு வழங்கிய காணொளிச் செய்தியில், இயேசுவைச் சந்திக்கக் காத்திருக்கும் மக்களிடம் மறைக்கல்வி ஆசிரியர்களின் வார்த்தைகள் முதலில் சென்றடைகின்றன என்று கூறியுள்ளார். விசுவாசத்தைப் போதிக்கையில், சட்டத்தை முன்னிறுத்தாமல், இறையன்பையும், இறைஇரக்கத்தையும் முன்னிறுத்துமாறு, வேதியர்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். வேதியர் பணி என்பது ஓர் அழைப்பு என்றும், சமயப் புறக்கணிப்பு நிலவும் இன்றைய உலகில், வேதியரின் வார்த்தைகள் முதல் நற்செய்தி அறிவிப்பாக உள்ளன என்றும், திருவழிபாட்டிலும், அருளடையாளங்களிலும் வேதியர், தன் வாழ்வின் உயிரூட்டத்தைப் பெறுகின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

வியட்நாம் அரசுத்தலைவர் மறைவுக்கு இரங்கல்

வியட்நாம் அரசுத்தலைவர் டிரான் டாய் குவாங் அவர்களின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தி ஒன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார். 61 வயது நிறைந்த, வியட்நாம் அரசுத்தலைவர் டிரான் டாய் குவாங் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக, செப்டம்பர் 21, இவ்வெள்ளி காலை காலமானார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு, இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

விக்டோரியா ஏரி விபத்து

இன்னும், டான்சானியாவில், விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்ததில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதையடுத்து, திருத்தந்தையின் அனுதாபமும், செபங்களும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2018, 15:08