தேடுதல்

மூவேளை செப உரையின் இறுதியில், மக்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் வழங்கப்பட்ட சிலுவை மூவேளை செப உரையின் இறுதியில், மக்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் வழங்கப்பட்ட சிலுவை 

சீடர்களின் பாதை, சிலுவை சுமந்த பாதை

வெறும் வாரத்தைகளால் அல்ல, கடவுள் மீது கொண்ட அன்பு மற்றும், அயலவர் மீதான அன்பின் செயல்பாடுகள் நிறைந்ததாக நம் வாழ்வு இருக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் சீடராக இருப்பதற்குரிய அடிப்படைத் தேவை என்பது, தியாகங்கள் செய்வதும், தன்னையே மறுப்பதும் ஆகும் என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்செல்ல விரும்புபவர்கள், தங்கள் சிலுவையை சுமந்துகொண்டு அவரைப் பின்செல்ல வேண்டும், ஏனெனில் இயேசுவே கூறியுள்ளதுபோல் வாழ்வைக் காக்க விரும்புபவர்கள் அதை இழந்துவிடுவர் என்றார்.

நம் வாழ்வு வெறும் வார்த்தைகளால் ஆனதாக இல்லாமல், கடவுள் மீதும், நம் அயலவர் மீதும் கொண்டுள்ள அன்பாலும் நிறைந்த செயல்பாடுகளால் ஆனதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உண்மையான அன்பில் மட்டுமே நாம் மகிழ்ச்சி காணமுடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்' என்று கேட்ட இயேசுவின் கேள்வி, நம் ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்டு பதிலும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இயேசுவின் பாதையானது, வெற்றிகள் நிறைந்த அகன்ற பாதையல்ல, மாறாக, துன்பங்களும், மறுதலிப்புகளும், புறக்கணிப்புகளும், சிலுவை மரணமும் கொண்ட பாதை என்பதை நினைவில் கொண்டு, இயேசுவின் சீடர்கள் அதை பின்பற்ற வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மூவேளை செப உரையின் இறுதியில், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் திருத்தந்தையின் பெயரால், சிறிய திருச்சிலுவை ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2018, 16:42