அனைத்துலக காதுகேளாதோர் மற்றும் சைகை மொழி வாரம் அனைத்துலக காதுகேளாதோர் மற்றும் சைகை மொழி வாரம் 

காதுகேளாதோர் உலக வாரத்திற்கு திருத்தந்தையின் செய்தி

மனிதர்களை மையப்படுத்தாமல், இலாபத்தை மையப்படுத்தும் ஆபத்தான போக்கும் இவ்வுலகில் வளர்ந்துள்ளது குறித்து, திருத்தந்தையின் கவலை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறரை ஒதுக்கிவைக்கும் போக்கும், தூக்கியெறியும் கலாச்சாரமும், இவ்வுலகில் பெருகிவரும் நிலையில், காதுகேளாதோர் கழகம், அனைவரையும் ஒருங்கிணைக்க மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்ட ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

காதுகேளாதோர் வாரத்திற்கு திருத்தந்தையின் செய்தி

செப்டம்பர் 23ம் தேதி முதல், 30ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் அனைத்துலக காதுகேளாதோர் மற்றும் சைகை மொழி வாரத்தையொட்டி திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி, செப்டம்பர் 28, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

1958ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி, காதுகேளாதோரின் முதல் உலக நாள், உரோம் நகரில் சிறப்பிக்கப்பட்டது என்பதை, தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 60ம் ஆண்டு நிறைவின்போது, இக்கழகத்தினருக்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மனிதர்களை மையப்படுத்தாத முன்னேற்றம்

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் உருவாகியுள்ள போதிலும், மனிதர்களை மையப்படுத்தாமல், இலாபத்தை மையப்படுத்தும் ஆபத்தான போக்கும் இவ்வுலகில் வளர்ந்துள்ளது குறித்து, திருத்தந்தை, தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார்.

காதுகேளாதோர் காட்டியுள்ள விடாமுயற்சி

காதுகேளாதோர் கழகத்தைச் சேர்ந்த பலர், தங்கள் விடாமுயற்சியாலும், மற்றவர்கள் அவர்களுக்குத் தந்த உறுதுணையாலும், உயர்ந்த பதவிகளை அடைந்துள்ளதற்கு, திருத்தந்தை தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

யாரையும் ஒதுக்கிவைக்காமல், அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கவும், அனைவருக்கும், அவரவருக்குரிய மாண்பை வழங்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை இச்செய்தியில் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2018, 15:33