தேடுதல்

பங்களாதேஷ் பல்சமய கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பங்களாதேஷ் பல்சமய கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

G 20 பல்சமய கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி

உண்மையான முன்னேற்றம், இறைவனிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் விளைவாக வருவது என்ற உண்மையைச் சொல்லித்தரும் கடமை, மதங்களுக்கு உள்ளது - திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள மதங்கள், இவ்வுலகிற்கு காட்டக்கூடிய முக்கியமான உண்மை ஒன்று உள்ளது என்றும், உரையாடல் வழியே நாம் இவ்வுலகை கட்டியெழுப்ப முடியும் என்பதே அவ்வுண்மை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 26, இப்புதன் முதல், 28 வருகிற வெள்ளி முடிய, அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரெஸ் நகரில் நடைபெறும் G 20 பல்சமய கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், இவ்வுலகின் பிரச்சனைகளுக்கு மதங்கள் தீர்வுகளை வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் இலாபம் என்ற தரவுகளை உயர்த்திப்பிடிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை, இவ்வுலகம், மனித சமுதாயத்தின் விடிவு என்று முன்னிறுத்தும் வேளையில், உண்மையான முன்னேற்றம், இறைவனிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் விளைவாக வருவது என்ற உண்மையைச் சொல்லித்தரும் கடமை, மதங்களுக்கு உள்ளது என்று, திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.

நம் பொதுவான இல்லமான இப்பூமிக்கோளத்தை காப்பாற்ற, இன்னும் தீவிரமான உரையாடல், அனைத்து நிலைகளிலும் நடைபெறவேண்டும் என்பதை, இச்செய்தியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பொருளாதாரம், மற்றும், வர்த்தகம், ஆகிய துறைகளால் உருவாக்கப்பட்டுள்ள G 20 பொருளாதார உச்சி மாநாடு என்ற முயற்சிக்கு ஒரு மாற்றுக் கலாச்சார அடையாளமாக, துவக்கப்பட்ட G 20 பல்சமய கருத்தரங்கு என்ற முயற்சி, G 20 பொருளாதார உச்சி மாநாடு நடைபெறும் நாடுகளில், நடைபெற்று வருகிறது.

நவம்பர் 30, மற்றும், டிசம்பர் 1 ஆகிய இருநாள்கள், புவனஸ் அயிரெஸ் நகரில் நடைபெறவிருக்கும்  G 20 பொருளாதார உச்சி  மாநாட்டிற்கு முன்னதாக நடைபெறும் G 20 பல்சமய கருத்தரங்கு, "மாண்புமிக்க ஓர் எதிர்காலத்திற்கு மதங்களின் பங்களிப்பு" என்ற மையக்கருத்துடன் நடைபெறுகிறது.

இதுவரை ஆஸ்திரேலியா, துருக்கி, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்ற G 20 பலசமய கருத்தரங்குகளைத் தொடர்ந்து, அர்ஜென்டீனாவில், இந்த முயற்சி, ஐந்தாவது முறையாக மேற்கொள்ளப்படுகிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2018, 16:12