மென்மையின் இறையியல் கருத்தரங்கின் பிரதிநிதிகள் சந்திப்பு மென்மையின் இறையியல் கருத்தரங்கின் பிரதிநிதிகள் சந்திப்பு 

"திருத்தந்தை பிரான்சிஸ் - மென்மையின் இறையியல்"

'இறையியல்' என்ற சொல், ஏட்டறிவைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும், 'மென்மை' என்ற சொல் உணர்வுகளைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும் தோன்றினாலும், இவ்விரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'இறையியல்' என்ற சொல்லும், 'மென்மை' என்ற சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சொற்களைப் போல் தெரிந்தாலும், அவை இரண்டையும் நம் கிறிஸ்தவ நம்பிக்கை பிரிக்க இயலாதவண்ணம் பிணைத்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இறையியலாளர்களிடமும், விவிலிய அறிஞர்களிடமும் கூறினார்.

செப்டம்பர் 14, இவ்வெள்ளி முதல், 16 வருகிற ஞாயிறு முடிய, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள இறையியலாளர்கள், விவிலிய அறிஞர்கள் மற்றும் மனித நேய ஆர்வலர்கள் ஆகியோரை, செப்டம்பர் 13, இவ்வியாழன் காலை, திருத்தந்தை அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், இவ்வாறு கூறினார்.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் உள்ள மென்மையின் இறையியல்" என்ற தலைப்பில், நடைபெறும் இக்கருத்தரங்கில் கூறப்பட்டுள்ள 'இறையியல்' என்ற சொல், ஏட்டறிவைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும், 'மென்மை' என்ற சொல் உணர்வுகளைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும் தோன்றினாலும், இவ்விரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

நம் இறைவன், கருணை, கனிவு, மென்மை ஆகிய பண்புகள் கொண்டவர் என்பதை, விவிலியமும், இறையியலும் தொடர்ந்து நமக்கு நினைவுறுத்திய வண்ணம் உள்ளன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பண்புகள் வழியே நாம் இறைவனையும், விவிலியத்தையும், இறையியலையும் பயில அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

நாம் இறைவனால் அன்பு கூரப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தால், மற்றவர்களை அன்புகூர்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடியும் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த அன்பு, மென்மையான உணர்வுகளால் வெளிப்படுத்தப்படுகின்றது என்று எடுத்துரைத்தார்.

அன்பு உறவுகளில் ஒருவர் தன்னை மையப்படுத்தும்போது, அவர் காட்டும் மென்மையும் வெறும் உணர்ச்சிகளாக வெளியாகும் என்ற எச்சரிக்கையை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான அன்பு என்பது, ஒருவரை, அவரது சுயநல எண்ணங்களிலிருந்து வெளியேற்றுகிறது என்று தன் உரையில் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2018, 15:17