மரியாவின் தூய இதயத்தின் பிள்ளைகள் என்ற சபையைச் சேர்ந்த துறவிகளுடன் திருத்தந்தை மரியாவின் தூய இதயத்தின் பிள்ளைகள் என்ற சபையைச் சேர்ந்த துறவிகளுடன் திருத்தந்தை 

இளையோர் மீது கூடுதல் கவனம் செலுத்த அழைப்பு

மரியாவின் தூய இதயத்தின் பிள்ளைகள் என்ற சபையைச் சேர்ந்த துறவிகள், பொதுநிலையினரிடையே, குறிப்பாக, இளையோரிடையே உழைக்க திருத்தந்தையின் அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு துறவற சபையும் அதன் தனிவரத்திற்கேற்ப பணியாற்ற, கத்தோலிக்கத் திருஅவை, துறவு சபைகளைத் தூண்டிவருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த மரியாவின் தூய இதயத்தின் பிள்ளைகள் என்ற சபையைச் சேர்ந்த துறவிகளிடம் கூறினார்.

பொதுநிலையினரை ஊக்குவிக்கும் தனிவரம்

இத்துறவு சபையை நிறுவிய, வணக்கத்திற்குரிய ஜியூசப்பே ஃபிராஸ்ஸினெத்தி (Giuseppe Frassinetti) அவர்கள், 1868ம் ஆண்டு இறையடி சேர்ந்ததன் 150ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இச்சபையினரின் பிரதிநிதிகள் 150 பேரை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினரை ஊக்குவிப்பது என்ற தனிவரத்தை இச்சபையினர் பெற்றுள்ளனர் என்று கூறினார்.

பொதுநிலையினரின் முக்கியத்துவம் குறித்து, 2ம் வத்திக்கான் சங்கம் எடுத்துரைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, அருள்பணி ஃபிராஸ்ஸினெத்தி அவர்கள், பொதுநிலையினர், திருஅவைக்கு ஆற்றக்கூடிய பங்களிப்பை நன்கு உணர்ந்திருந்தார் என்று, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இளையோர் மீது கூடுதல் கவனம்

19ம் நூற்றாண்டின் சமகாலத்தில் வாழ்ந்த அருள்பணி ஃபிராஸ்ஸினெத்தி அவர்களும், புனித தொன் போஸ்கொ அவர்களும், இளையோர் மீது தனி கவனம் செலுத்தினர் என்பதை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவிருப்பதை மனதில் வைத்து, இச்சபையினர், இளையோர் மீது, கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இன்றையச் சூழலில், அருள்பணியாளரும், துறவியரும் பல்வேறு கடினமான பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டியுள்ளது என்பதை தன் உரையின் இறுதியில் நினைவுபடுத்திய திருத்தந்தை, அன்னை மரியாவின் துணையோடு நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2018, 15:31