தேடுதல்

தொழில்கூட விபத்துக்களால் பாதிக்கப்பட்டோருக்கென பணியாற்றும் ANMIL கழகத்தினருடன் திருத்தந்தை தொழில்கூட விபத்துக்களால் பாதிக்கப்பட்டோருக்கென பணியாற்றும் ANMIL கழகத்தினருடன் திருத்தந்தை 

ANMIL இத்தாலியக் கழகப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

தொழில்கூட விபத்துக்களால் பாதிக்கப்பட்டோருக்கு பணியாற்றும் ANMIL இத்தாலியத் தொழில் கழகத்தினரை திருத்தந்தை பாராட்டினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

விபத்துக்களால் உடல் உறுப்புக்களை இழந்தோருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உறுதுணையாக இருக்க, நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இத்தாலியக் கழகம் ஒன்றின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

தொழில்கூடங்களில் பணியாற்றும் வேளையில் ஏற்படும் விபத்துக்களால் உடல் உறுப்புக்களை இழந்தோர், மற்றும், வேறு வழிகளில் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கென உருவாக்கப்பட்டுள்ள இத்தாலியத் தொழில் கழகத்தின் பிரதிநிதிகளை, செப்டம்பர் 20 இவ்வியாழன் மதியம், வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.

ANMIL என்ற இத்தாலியக் கழகத்தினருக்கு பாராட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள ANMIL என்ற இத்தாலியக் கழகத்தின் ஒரு முக்கிய பணி, விபத்துக்களால் பாதிக்கப்பட்டோரை, மீண்டும் சமுதாயத்தில் முழுமையாகப் பங்கேற்கும் வகையில் இணைப்பது என்பதை அறிந்து, தான் மிகவும் மகிழ்வதாகக் கூறினார், திருத்தந்தை.

பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் வர்த்தக உலகம், உடல் உறுப்புக்களை இழந்தோர், மற்றும், மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கிவரும் வேளையில், ANMIL போன்ற அமைப்பினர், இவர்களுக்கு முக்கியத்துவம் தருவது மனதிற்கு நிறைவை அளிக்கும் மாற்று வழி என்று, திருத்தந்தை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இலாபம் என்ற சுயநலக் கொள்கைக்கு மாற்றாக...

உற்பத்தியின் பெருக்கம், அதிக இலாபம் என்ற சுயநல ஆசைகளால், தொழில் கூடங்களில் தொழிலாளரின் நலன் மீதும், விபத்துக்களைத் தடுக்கும் வழிகள் மீதும் அதிக கவனம் செலுத்தாமல் தொழிற்சாலைகள் இயங்குவது குறித்து, திருத்தந்தை, தன் உரையில் கவலையை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கென ANMIL கழகம், கடந்த 75 ஆண்டுகள் பணியாற்றிவருவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பாராட்டையும் நன்றியையும் கூறி, தன்னைச் சந்திக்க வந்திருந்த ஏறத்தாழ 300 பிரதிநிதிகளுக்கு தன் ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2018, 15:26