தேடுதல்

வேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் கலந்துகொண்டோரைச் சந்திக்கும் திருத்தந்தை வேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் கலந்துகொண்டோரைச் சந்திக்கும் திருத்தந்தை 

இனவெறியைக் குறைக்க மதத்தலைவர்களின் பணி - திருத்தந்தை

ஒருவர் ஒருவரை அன்பு செய்யும் நிலையை நாம் அடைவதற்கு, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உறைந்திருக்கும் இறைவனின் சாயல் என்ற உண்மை உதவியாக இருக்கும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இனம், நாடு, மொழி, மதம் என்ற பல்வேறு காரணங்களால் உருவாகும் சந்தேகங்களும், அச்சங்களும் நம் எண்ணங்களை ஆக்ரமித்து, ஒருவர் ஒருவரை விட்டு விலகி நிற்கச் செய்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.

"உலகெங்கும் நிகழும் குடிபெயர்தல் என்ற பின்னணியில், வேற்றினத்தவர் மீது அச்சம், மற்றும், இனவெறி" என்ற தலைப்பில், உரோம் நகரில், செப்டம்பர் 18, இச்செவ்வாய் முதல் இவ்வியாழன் முடிய நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை, செப்டம்பர் 20 இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், தான் தயாரித்து வைத்திருந்த உரையை முழுமையாக வழங்குவதைக் காட்டிலும், அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதில் தான் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறினார்.

வேற்றினத்தவர் மீது அச்சமும், இனவெறியும் வளர்ந்துவரும் இன்றையச் சூழலில், மதத் தலைவர்களின் பணி இன்னும் நடுநிலையோடு, மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமையவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் வேண்டிக்கொண்டார்.

ஒருவர் ஒருவரை சகித்துக்கொள்ளும் நிலையைத் தாண்டி, ஒருவர் ஒருவரை அன்பு செய்யும் நிலையை நாம் அடைவதற்கு, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உறைந்திருக்கும் இறைவனின் சாயல் என்ற உண்மை உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

"நான் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொள்ளவில்லை" (மத். 25,43) என்று இயேசு, கூறிய வேளையில், நாடுவிட்டு நாடு செல்லும் ஒவ்வொரு புலம் பெயர்ந்தோருடனும் தன்னை அடையாளப் படுத்தியுள்ளார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

"உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது" (மத். 20,26) என்று இயேசு கூறியது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த அழைத்தலால், கிறிஸ்தவர்கள், இவ்வுலகப் போக்கிற்கு எதிராகச் செல்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2018, 15:37