தேடுதல்

Knock அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை Knock அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை 

Knock அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை

Knock அன்னை மரியா திருத்தலத்திற்கு முன்பிருந்த வளாகத்தில் ஆற்றிய மூவேளை செப உரைக்குப் பின்னர், அயர்லாந்தின் கைதிகள் எல்லாரையும் சிறப்பாக நினைவுகூர்ந்து செபித்தார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அயர்லாந்து நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளும், நிறைவு நாளுமாகிய, ஆகஸ்ட் 26, இஞ்ஞாயிறு காலை 7.40 மணிக்கு, டப்ளின் திருப்பீட தூதரகத்திலிருந்து, விமான நிலையம் வந்து, St.Aidan என்ற தேசிய விமானத்தில் Knock நகருக்குப் பயணமானார், திருத்தந்தை பிரான்சிஸ். அயர்லாந்தின் ஏறத்தாழ எல்லா உள்நாட்டு விமானங்களுக்கும், அந்நாட்டின் புனிதர்கள் பெயர்களே கொடுக்கப்பட்டுள்ளன. நாற்பது நிமிடம் விமானப்பயணம் செய்து, Knock நகரை அடைந்த திருத்தந்தையை, நூற்றுக்கணக்கான பள்ளிச் சிறார் உட்பட ஏராளமான மக்கள், பாப்பிறை மற்றும் குடும்பங்களின் 9வது உலக மாநாட்டின் நிலநிறக் கொடிகளை வைத்துக்கொண்டு திருத்தந்தையை வரவேற்று, வாழ்த்தினர். அயர்லாந்தின், Knock தேசிய அன்னை மரியா திருத்தலத்தின், காட்சி சிற்றாலயத்திற்கு முதலில் சென்ற திருத்தந்தை, அங்கு அமர்ந்திருந்த வயதானவர்கள் மற்றும் பலரை கைகுலுக்கி வாழ்த்தினார். அங்கு நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சிறிதுநேரம் அமர்ந்து அமைதியாகச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவுக்கு, தங்க செபமாலை ஒன்றை அர்ப்பணித்தார். இரு சிறார் மெழுகுதிரியுடன் நின்று கொண்டிருந்தனர். அதை வாங்கி, அதிலிருந்து பெரிய மெழுகுதிரி ஒன்றையும் ஏற்றினார் திருத்தந்தை. பெரிய அழகான அன்னை மரியா படம் ஒன்றும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது.

அயர்லாந்தில் கைதிகளுக்காக செபம்

Knock திருத்தலத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் நின்று, அவ்விடத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஞாயிறு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வுரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை, அயர்லாந்தில் சிறையிலுள்ள ஆண்களையும், பெண்களையும் சிறப்பாக வாழ்த்துகிறேன். நான் அயர்லாந்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென எழுதியவர்களுக்கு, குறிப்பாக நன்றி சொல்கிறேன். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் செபிக்கின்றேன் என உறுதி கூறுகிறேன். இரக்கத்தின் அன்னை மரியா, உங்களை எப்போதும் கண்காணித்து பாதுகாப்பாராக, உங்களை, விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் திடப்படுத்துவாராக! என்று கூறினார். எப்போதும் மழை பெய்யக்கூடும் என்ற காலநிலையில், மக்கள் குளிர் மற்றும் மழையில் உடுத்தும் ஆடைகளை அணிந்திருந்தனர்.   

Knock அன்னை மரியா திருத்தலத்தில் மூவேளை செப உரையாற்றி, எல்லாருக்கும் தன் ஆசிரை அளித்து, டப்ளின் நகருக்குத் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். பகல் 12.10 மணிக்கு திருப்பீட தூதரகம் சென்று, மதிய உணவருந்தி ஓய்வெடுத்தார். இஞ்ஞாயிறு மாலை மூன்று மணிக்கு, டப்ளின் ஃபோனிக்ஸ் பூங்காவில், குடும்பங்களின் ஒன்பதாவது உலக மாநாடு திருப்பலியைத் தொடங்கினார். இத்திருப்பலியுடன் இந்த உலக மாநாடு நிறைவு பெறுகின்றது. இத்திருப்பலிக்குப் பின்னர், டப்ளின் தொமினிக்கன் அருள்சகோதரிகள் இல்லத்தில் அயர்லாந்து ஆயர்களைச் சந்தித்து, உரையாற்றி உரோமைக்குப் புறப்படுவது, இந்நாளின் பயணத் திட்டத்தில் உள்ளது. இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அயர்லாந்து நாட்டு முதல் திருத்தூதுப் பயணம் மற்றும், அவரின் 24வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வருகிறது. இப்பயணம், அயர்லாந்து மக்களின் விசுவாசத்தில் புதுப்பித்தலைக் கொணரும் என நம்புவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2018, 15:47