தேடுதல்

Vatican News
Croke பூங்கா அரங்கத்தில் குடும்பங்கள் விழா Croke பூங்கா அரங்கத்தில் குடும்பங்கள் விழா  (Vatican Media)

Croke அரங்கத்தில் குடும்பங்கள் விழா

‘குடும்பத்தில் மன்னிப்பு மற்றும் நம்பிக்கை, பாட்டி தாத்தாக்களின் முக்கியத்துவம், குடும்ப வாழ்வில், சமூகத்தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு’ போன்ற தலைப்புக்களில், குடும்பங்கள் சாட்சியங்கள் பகர்ந்தனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

குடும்பங்கள் விழாவில் கலந்துகொள்வதற்காக, ஆகஸ்ட் 25, சனிக்கிழமை இரவு 7 மணி 15 நிமிடத்திற்கு, திருப்பீட தூதரகத்திலிருந்து, டப்ளின் நகரின் Croke பூங்கா அரங்கத்திற்கு காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய அரங்கங்களில், இதுவும் ஒன்று. அயர்லாந்தின் தனித்துவம் மற்றும், வரலாற்றின் அடையாளமாகத் திகழும் இந்த அரங்கத்தில், 82 ஆயிரத்து 300 பேர் அமரலாம். திருத்தந்தை கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஏறத்தாழ எழுபதாயிரம் பேர் இருந்தனர். குடும்பங்கள் சாட்சியங்களைப் பகிர்ந்துகொள்ளும்போதும், கலைநிகழ்ச்சிகளிலும் திருத்தந்தைக்கு நெருக்கமாய் எல்லாரும் அமர்வதற்கு வசதியாக, ‘சந்திப்பின் வட்டம்’ என்ற கருத்தில், இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் பேர் கொண்ட பாடகர் குழு, ஐம்பது இசைக்கருவிகள் குழு, 700க்கும் அதிகமான நடனக்கலைஞர்கள் என, அயர்லாந்தின் சிறந்த கலைஞர்களும், பாடகர்களும் இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இத்தாலியின் புகழ்பெற்ற, பார்வையற்ற பாடகர் அந்த்ரேயா பொச்செல்லி மற்றும், அமெரிக்காவின் புகழ்பெற்ற, ஒரு ஜாஸ் பாடகர் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், முதலில், திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவையின் தலைவர், கர்தினால் Kevin Joseph Farrell அவர்கள் வரவேற்புரை வழங்கி, குடும்பங்களுக்காகச் செபித்தார். பின்னர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

குடும்பங்களின் சாட்சியங்கள்

இந்தியா, கானடா, ஈராக், அயர்லாந்து, புர்க்கினோ ஃபாசோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினர், மேடையில் தங்கள் பிள்ளைகளுடன், திருத்தந்தையின் முன்பாக சாட்சி பகர்ந்தனர். இக்குடும்பங்களில் ஒன்றில், பத்து பிள்ளைகள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பத்தினரையும் கைகுலுக்கி ஆசிர்வதித்து, செபமாலைகள் கொடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்தியாவின் மும்பையிலிருந்து வந்து சாட்சி சொன்ன குடும்பத்திற்குப் பதிலளித்த திருத்தந்தை, சமூகத்தொடர்பு சாதனங்களைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது பற்றிச் சொன்னார். நட்புறவு, ஒருமைப்பாடு மற்றும், ஒருவருக்கொருவர் ஆதரவு ஆகியவற்றை வலைத்தளத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சமூகத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். சமூகத்தொடர்பு சாதனங்கள், அளவோடும், விவேகத்தோடும் பயன்படுத்தப்பட்டால் அவை பயனுள்ளவையாய் இருக்கும் என்றும் திருத்தந்தை கூறினார். இறுதியில், குடும்பங்களின் உலக மாநாட்டிற்காகச் செபித்து, அனைவரையும் ஆசிர்வதித்து இந்நிகழ்வை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், டப்ளின் திருப்பீட தூதரகம் வந்து இரவுணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை. இத்துடன் அயர்லாந்து நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.

26 August 2018, 15:38