டப்ளின் கப்புச்சின் வீடற்றவர் மையத்தில் திருத்தந்தை டப்ளின் கப்புச்சின் வீடற்றவர் மையத்தில் திருத்தந்தை 

டப்ளின் வீடற்றவர் மையத்தில் திருத்தந்தை

கப்புச்சின் சபையைச் சேர்ந்தவர்கள், துன்புறும் மக்கள் வழியே, கிறிஸ்துவின் காயங்களைத் தியானிக்கும் அருளைப் பெற்றுள்ளனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

டப்ளினில், கடந்த 48 ஆண்டுகளாக, கப்புச்சின் சபை அருள்பணியாளர்கள் நடத்தும் வீடற்றவர் மையத்திற்குச் சென்ற திருத்தந்தையை, அந்த மையத்தின் இயக்குனர், அருள்சகோதரர் Kevin Crowley  அவர்கள் வரவேற்றுப் பேசினார். திருத்தந்தையே, எம் சகோதரர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, கப்புச்சின் அருள்சகோதரர்கள், மக்களின் சகோதரர்கள் என எப்போதும் அறியப்படுகிறார்கள். இந்தப் பெயருக்கு, தாங்கள், இந்நாள்களில் தூண்டுதலாக இருக்கின்றீர்கள். ஏனெனில், தாங்கள் மக்களின் மற்றும் ஏழைகளின் உண்மையான சகோதரர். இந்த மையம், Bow தெருவில், வீடற்ற மக்களுக்காக, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம், ஒவ்வொரு நாளும் 700க்கும் அதிகமானவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. மேலும், டப்ளினில் வீடின்றியும், ஏழைகளாகவும் உள்ள மக்களுக்கு, ஒவ்வொரு புதன்கிழமையும், ஏறக்குறைய 1,500 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது. இவ்வாறு அருள்சகோதரர் Kevin Crowley  அவர்கள்  கூறியவுடன், திருத்தந்தையும், அந்நேரத்தில் தனக்கெழுந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.    

வீடற்றவர் மையத்தில் திருத்தந்தையின் பகிர்வு

கப்புச்சின் சபையைச் சேர்ந்தவர்கள், மக்களுக்கு மிக நெருங்கியவர்களாக வாழ்கின்றனர். துன்புறும் மக்கள் வழியே, கிறிஸ்துவின் காயங்களைத் தியானிக்கும் அருளைப் பெற்றுள்ளனர். மக்கள், இவர்களை அணுகி வருவதற்கு ஒரு முக்கிய காரணம், இம்மக்கள் தங்கள் மாண்பை இழக்காத வகையில், இவர்கள் உதவிகள் செய்து வருகின்றனர். இச்சபையினர் மீது மக்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைக்கு நன்றி. திருஅவைக்காக, அருள்பணியாளர்களுக்காக, ஆயர்களுக்காகச் செபியுங்கள். எனக்காகவும் செபிக்க மறக்காதீர்கள் என்று, அம்மையத்தில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வீடற்றவர் மையத்தைப் பார்வையிட்ட பின்னர், டப்ளின் திருப்பீட தூதரகம் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார், திருத்தந்தை. அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களில் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களில் எட்டுப்பேரை, அந்த தூதரகத்தில் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ். அச்சமயத்தில், சில அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2018, 15:32