Knock அன்னை மரியா திருத்தலம் Knock அன்னை மரியா திருத்தலம் 

திருத்தந்தையின் அயர்லாந்து திருத்தூதுப் பயணம்

'அன்பு என்பது, நமக்காகவும், முழு மனித குடும்பத்திற்காகவும் கடவுள் காணும் கனவு. இதை ஒருபோதும் மறவாதீர்கள். குடும்பங்கள், கிறிஸ்துவின் அன்பின் மீது உருவாக்கப்பட்டுள்ளன. குடும்பங்கள், திருஅவை மற்றும் உலகின் நம்பிக்கை' - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒன்பதாவது உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, அயர்லாந்து நாட்டிற்கு, ஆகஸ்ட் 25, இச்சனிக்கிழமை காலையில் அயர்லாந்து தலைநகர் டப்ளின் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நாள் மாலையில், இரு முக்கிய குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார். மாலை 3.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 8 மணிக்கு டப்ளின் நகரின், முதல் புனித மரியா பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நகரில் கத்தோலிக்கம் புதுப்பிறப்படைந்ததன் அடையாளமாக விளங்கும் இப்பேராலயத்தில், ஏறக்குறைய 350, திருமண ஒப்பந்தமாகியிருந்த மற்றும் திருமணமாகியிருந்த இளம் தம்பதியர் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். அண்மையில் தங்களின் திருமண பொன்விழாவைச் சிறப்பித்த ஒரு வயதான தம்பதியர், திருமண மற்றும் குடும்ப வாழ்வின் மேன்மை பற்றி பகிர்ந்துகொண்டு, இளம் தம்பதியரை ஊக்கப்படுத்தினர். அதற்குப் பின்னர், வருகிற செப்டம்பர் 27ம் தேதியன்று திருமணம் செய்யவிருக்கும் Denis Nulty, Sinead Keoghan, இளம் தம்பதியர் Stephen Maguire - Jordan Cahill ஆகியோர், திருத்தந்தையிடம் இரு கேள்விகள் கேட்டனர். அவர்களுக்குப் பதிலளித்து, திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். புனித மரியா பேராலய நிகழ்வை நிறைவுசெய்து, அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, வீடற்ற மக்களுக்கு நடத்தப்படும் மையத்திற்கு, திறந்த வெள்ளைநிற காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2018, 15:31